சென்னை விமான நிலையத்தில் புதிதாக திறக்கப்பட்ட பன்னாட்டு விமான நிலையம் செயல்பாட்டுக்கு வந்ததையடுத்து, டாக்காவில் இருந்து பயணிகளுடன் முதல் விமானம் வந்து இறங்கியது.
சென்னை விமான நிலையத்தில் 1260 கோடி ரூபாய் செலவில் ஒருங்கிணைந்த பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்பட்டது. இதனை கடந்த மாதம் 27ஆம் தேதி பாரத பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். உலகத் தரத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்த முனையம் மூலம், சென்னை விமான நிலையத்தின் பயணிகள் கையாளும் திறன் 2.3 கோடியில் இருந்து, 3 கோடியாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க : ஓபிஎஸ் நடத்திய மாநாட்டை விமர்சித்து அதிமுக சார்பில் போஸ்டர்...தாம்பரத்தில் பரபரப்பு!
இந்நிலையில் புதிதாக கட்டப்பட்ட ஒருங்கிணைந்த பன்னாட்டு விமான நிலையம் செயல்பாட்டுக்கு வந்த நிலையில், இன்று டாக்காவில் இருந்து 189 பயணிகளுடன் புறப்பட்ட விமானம் சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கியது, இதன்மூலம், புதிய பன்னாட்டு முனையத்தில் வந்து இறங்கிய முதல் விமானம் என்பதால் சென்னை விமான நிலைய அதிகாரிகள் தண்ணீரை பீச்சி அடித்து விமானத்தை வரவேற்றனர்.
அதனைத் தொடர்ந்து, அந்த விமானத்தில் மூலம் வந்திறங்கிய பயணிகளுக்கு மலர் கொடுத்து சிறப்பாக வரவேற்றவுடன், சுங்க மற்றும் குடியுரிமை சோதனை நடத்தப்பட்டது. மேலும் பயணிகளுக்கு ரேண்டம் முறையில் கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன்பின், மீண்டும் சென்னை விமான நிலையத்தில் இருந்து டாக்காவிற்கு 192 பயணிகளுடன் விமானம் புறப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.