தமிழ்நாடு

மாற்றப்படும் கிழக்குக் கடற்கரை தொடர்வண்டிப் பாதை.... சென்னை மக்களுக்கு அநியாயம் இழைக்கப்படுகிறதா?!!

Malaimurasu Seithigal TV

தமிழ்நாட்டின் கனவுத் தொடர்வண்டித் திட்டங்களில் ஒன்றான சென்னையிலிருந்து மாமல்லபுரம், புதுச்சேரி வழியாக கடலூருக்கு கிழக்குக் கடற்கரை வழியாக தொடர்வண்டிப் பாதை அமைக்கும் திட்டத்தில் மாற்றம் செய்ய தொடர்வண்டித் துறை முடிவு செய்திருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சி அளிப்பதாக அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.  

பாதை என்ன?:

சென்னை பெருங்குடியில் தொடங்கி மாமல்லபுரம், கல்பாக்கம், புதுச்சேரி வழியாக கடலூருக்கு தொடர்வண்டிப் பாதை அமைப்பது தான் 2007ஆம் ஆண்டில் தீட்டப்பட்ட திட்டம் ஆகும்.  இந்தத் திட்டத்திற்கு தான் அப்போதைய மத்தியத் திட்டக்குழு ஒப்புதல் அளித்தது.  இதுதான் தமிழ்நாட்டிற்கு, குறிப்பாக சென்னையின் தென்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு மிகவும் பயனளிக்கும் திட்டம் ஆகும்.  கிழக்குக் கடற்கரை தொடர்வண்டிப்பாதை திட்டத்தில் ஏதேனும் மாற்றங்கள் செய்யப்பட்டால், அது அந்தத் திட்டத்தின் நோக்கத்தையே சிதைத்துவிடும்.

மாற்றம் என்ன?:

ஆனால், இப்போது பெருங்குடிக்கு மாற்றாக செங்கல்பட்டு நகரில் இருந்து இந்தத் திட்டத்தை தொடங்க தெற்கு தொடர்வண்டித் துறை திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது எனவும் இதற்காக, தெற்கு தொடர்வண்டித் துறை தரப்பில் கூறப்படும் காரணம், பெருங்குடி மற்றும் அதையொட்டிய கிழக்குக் கடற்கரைச் சாலை மற்றும் பழைய மாமல்லபுரம் சாலை பகுதிகளில் நிலத்தின் மதிப்பு அதிகரித்து விட்டது என்பதுதான் என்பதுதான் எனக் கூறிய அன்புமணி ராமதாஸ் இந்தக் காரணம் ஏற்றுக்கொள்ளத் தக்கது அல்ல எனத் தெரிவித்துள்ளார்.

சிதைந்து விடும்:

பெருங்குடிக்கு பதிலாக செங்கல்பட்டில் இருந்து இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதால், பல பாதிப்புகள் ஏற்படக்கூடும் எனவும் செங்கல்பட்டில் இருந்து இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டால், அதனால் சென்னை மாநகர மக்களுக்கு எந்தப் பயனும் இல்லை எனவும் கூறியுள்ளார்.  

மேலும் அவர்கள் இன்னொரு தொடர்வண்டி மூலம் செங்கல்பட்டுக்குச் சென்று, அங்கிருந்து கிழக்குத் தொடர்வண்டிப் பாதையில் புதுவைக்கோ, கடலூருக்கோ செல்வதைவிட, பேருந்தில் நேரடியாக சென்றுவிட முடியும் எனவும் அதுமட்டுமின்றி, சென்னை முதல் கன்னியாகுமரி வரை கடற்கரையை ஒட்டியே தொடர்வண்டிப் பாதை என்ற கனவுத் திட்டம் சிதைந்து விடும் எனவும் தெரிவித்துள்ளார்.

தண்டனையாக:

பெருங்குடியில் இருந்து கிழக்குக் கடற்கரை தொடர்வண்டிப் பாதை அமைப்பதற்கு திட்டச் செலவு சற்று அதிகரித்தாலும் கூட, அந்தப் பாதையில் திட்டத்தை செயல்படுத்துவது தான் சரியானதாக இருக்கும் எனவும் அதற்காக ஆகும் கூடுதல் செலவை, இந்தத் திட்டத்தை 16 ஆண்டுகள் தாமதப்படுத்தியதற்கான தண்டனையாக ஏற்றுக்கொள்ள வேண்டியது தான் எனவும் கூறியுள்ளார்.  

மேலும் சென்னை முதல் கடலூர் வரையிலான கிழக்குக் கடற்கரை தொடர்வண்டிப் பாதை ஏற்கெனவே அறிவிக்கப்பட்டதைப்போல பெருங்குடியிலிருந்தே அமைக்கப்படும் என்று தெற்கு தொடர்வண்டித் துறை அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் எனவும் தெரிவித்துள்ளார் அன்புமணி ராமதாஸ்.