தமிழ்நாடு

முதலமைச்சராக அல்ல...டெல்டாகாரன் என்ற முறையில்...முதல் ஆளாக எதிர்ப்பேன் - முதலமைச்சர் உறுதி!

Tamil Selvi Selvakumar

முதலமைச்சராக மட்டுமல்ல நானும் ஒரு டெல்டா காரன் என்ற அடிப்படையில் நிலக்கரி சுரங்கம் அமைக்க முதல் ஆளாக எதிர்ப்பேன் என பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதிபட தெரிவித்தார். 

தமிழ்நாடு சட்டப்பேரவையில், நேரமில்லா நேரத்தில் டெல்டா பகுதியில் நிலக்கரி சுரங்கம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ், பா.ம.க., வி.சி.க., உள்ளிட்ட அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் அவசர பொது முக்கியத்துவம் வாய்ந்த சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர். 

தீர்மானத்தின் மீது பேசிய தி.மு.க. உறுப்பினர் டி.ஆர். பி. ராஜா, மாநில அரசின் கவனத்திற்கு கொண்டு வராமல் மத்திய அரசு தனிச்சையாக அறிப்பை வெளியிட்டுள்ளதாக குற்றம் சாட்டினார். 

தொடர்ந்து பேசிய அ.தி.மு.க. உறுப்பினர் காமராஜ், நிலக்கரி எடுப்பதற்கு ஓராண்டாக நடைபெறும் டெண்டர் நடவடிக்கை தி.மு.க. அரசுக்கு தெரியாமல் போனது எப்படி என கேள்வி எழுப்பினர். 

இதையடுத்து பேசிய காங்கிரஸ் உறுப்பினர் செல்வப்பெருந்தகை,  மத்திய அரசு கொண்டு வரும் திட்டங்கள் அனைத்தும் தமிழக மக்களுக்கு எதிரானது என்றும், நிலக்கரி திட்டத்தை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.  

தொடர்ந்து பேசிய அதிமுக  உறுப்பினர் வைத்திலிங்கம், கொந்தளித்துப் போயிருக்கும் மக்களின் பதற்றத்தை தவிர்க்கும் வகையில், நிலக்கரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து சிறப்பு தீர்மானம் கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தினார். 

இதற்கு அமைச்சர்கள் பதிலளித்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்தார். அப்போது பேசிய அவர், மத்திய அரசின் இந்த  செய்தியைக் கேட்டு நானும் அதிர்ச்சி அடைந்தேன். முதலமைச்சர் என்ற முறையில் மட்டுமல்ல டெல்டா காரன் என்ற முறையிலும், நிலக்கரி சுரங்கத்தை முதல் ஆளாய் எதிர்ப்பேன் என்றும், இது குறித்து மத்திய அரசுக்கு கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளதாகவும், தமிழக அரசு இதற்கு அனுமதி வழங்காது என உறுதிபட தெரிவித்தார்.