தமிழ்நாடு

பாரம்பரிய உடையில் சமத்துவ பொங்கல்...கோலகலமாக கொண்டாடிய மாணவ, மாணவிகள்!

Tamil Selvi Selvakumar

தமிழகத்தில் பல்வேறு கல்லூரிகளில் மாணவ, மாணவியர்கள் சமத்துவ பொங்கல் விழாவை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

சமத்துவ பொங்கல்:

சென்னையை அடுத்த பூவிருந்தவல்லி அருகே சவிதா பல்கலைக்கழகத்தில்  5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு சமத்துவ பொங்கல் விழாவை உற்சாகமாக கொண்டாடினர். விழாவில் தமிழர் கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் வகையில்  பம்பு செட், மாட்டு வண்டி, ஏர் உழும் கருவி, ஜல்லிக்கட்டு காளை, என  40 க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டு இருந்தன. தொடர்ந்து மயிலாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம், நடன நிகழ்ச்சி நடைபெற்றது.  பின்னர்  மாணவர்களுக்கு சிலம்பம், சடுகுடு, வழுக்கு மரமேருதல் உள்ளிட்ட போட்டிகளும், மாணவிகளுக்கு கோலப்போட்டி, கவிதைப் போட்டி, ஓவியபோட்டியென பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.

இதேபோல் தஞ்சை அடுத்த தனியார் கல்லூரியில்  மாணவ மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் ஊழியர்கள் என சாதி மத பாகுபாடு இல்லாமல் ஒன்று கூடி பாரம்பரிய உடை அணிந்து மண்பானையில் சர்க்கரை பொங்கல், வெண் பொங்கல் வைத்தும், கரும்புகளை கட்டி குடிசைகளை அமைத்து சமத்துவமாக பொங்கல் வைத்து உற்சாகமாக கொண்டாடினர். மேலும் கல்லூரி மாணவிகள் கோலப்போட்டி மற்றும் கலை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றனர்