தமிழ்நாடு

கோலாகலமாக தொடங்கியது ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயில் சித்திரை தேரோட்டம்!

Tamil Selvi Selvakumar

பூலோக வைகுண்டமான ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் சித்திரை தேரோட்டத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துக் கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

108 வைணவ ஸ்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என பக்தர்களால் போற்றப்படுவதுமான ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயில் மிகவும் புகழ் பெற்றதாகும். இந்த கோயிலில் ஆண்டுதோறும் விருப்பன் திருநாள் எனப்படும் சித்திரை திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம், அதன்படி கடந்த 11 ஆம் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. 10 நாட்கள் நடைபெறும் சித்திரை திருவிழாவின் போது நம்பெருமாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.

இந்நிலையில் இந்த விழாவின் முக்கிய நிகழ்வான சித்திரை தேரோட்டம் வெகுவிமரிசையாக தொடங்கியது. லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துக் கொண்டு ரங்கா, ரங்கா என்ற பக்தி முழக்கங்களுடன் தேரை வடம் பிடித்து இழுத்து வருகின்றனர். 

4 சித்திரை வீதிகளிலும் தேர் வலம் வரவுள்ள நிலையில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் தேரோட்டத்தை முன்னிட்டு திருச்சி மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.