தமிழ்நாடு

மருதுபாண்டியர்களின் நினைவிடத்தில் தென் மண்டல ஐ.ஜி. ஆய்வு!

Malaimurasu Seithigal TV

திருப்பத்தூரில் மருதுபாண்டியர்களின் நினைவிடத்தில் தென் மண்டல காவல்துறை தலைவர் நரேந்திரன் நாயர் ஆய்வு நடத்தியுள்ளார். 

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் அமைந்துள்ள மருது பாண்டியர்களின் நினைவிடத்தில் ஒவ்வொரு ஆண்டும் அவர்களது நினைவுநாளான அக்டோபர் 24ஆம் தேதி அரசு விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டும் வருகின்ற அக்டோபர் 24ல் அவர்களது 222 வது நினைவுநாள் அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு பணிகள் குறித்து தென் மண்டல காவல்துறை தலைவர் நரேந்திரன்நாயர் ஆய்வு மேற்கொண்டார்.

ஆங்கிலேயரை எதிர்த்து இந்தியாவிலேயே முதன்முதலாக தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்டத்தை தொடங்கியவர்கள் மாமன்னர்கள் மருது சகோதரர்கள். ஆங்கிலேயருக்கு எதிராக ஆயுதம் தாங்கிப் போராடிய இவ்விருவரும் ஆங்கிலேயரால் 1801 ஆம் ஆண்டு அக்டோபர் 24 இல் திருப்பத்தூரில் தூக்கிலிடப்பட்டனர். இவர்களின் 222-வது நினைவுநாள் வருகின்ற 24 ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இந்நாளில் திருப்பத்தூரில் உள்ள அவரது நினைவு மண்டபம் மற்றும் தூக்கிலிடப்பட்ட இடத்தில் அமைந்துள்ள நினைவுத்தூண் பகுதிக்கு அமைச்சர்கள், அரசு அதிகாரிகள், பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள், சமுதாய அமைப்புகள் என ஆயிரக்கணக்கானோர் அஞ்சலி செலுத்துவதற்காக வருகை தருவர். இந்த நிகழ்வின் போது எந்த அசம்பாவிதமும் ஏற்படா வண்ணம் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும், போக்குவரத்து வழித்தடங்கள் குறித்தும் காவல்துறை உயரதிகாரிகள், மாவட்ட ஆட்சியர் ஆய்வுகளை மேற்கொள்வது வழக்கம்

 அதேபோன்று இந்த ஆண்டும் வருகின்ற 24ல் நடைபெற உள்ள மருது பாண்டியர் நினைவு நாளை முன்னிட்டு அவரது நினைவு மண்டபம் மற்றும் நினைவு தூண் பகுதிகளில் தென்மண்டல காவல்துறை தலைவர் நரேந்திரன் ஆய்வினை மேற்கொண்டார். நினைவு மண்டபத்திற்கு வருகை தந்த காவல் துறை தலைவரை வாரிசுதாரர் ராமசாமி பொன்னாடை அணிவித்து வரவேற்றார். அதன் பின்பு தனது காலணிகளை கழட்டி விட்டு மண்டபத்திற்குள் வந்த ஐஜி மருதுபாண்டியர்கள் சிலைகளை பார்வையிட்டார். பின்பு அங்கு நடைபெறும் வேலை பணிகள் மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது பற்றி கேட்டறிந்தார். தொடர்ந்து திருப்பத்தூர் பேருந்து நிலையம் எதிரே அமைந்துள்ள மாமன்னர்கள் மருது பாண்டியர்கள் தூக்கிலிடப்பட்ட இடமான நினைவுத்தூண் பகுதியை பார்வையிட்ட ஐஜி போக்குவரத்து வழித்தடங்கள் மற்றும் பாதுகாப்பு பணிகள் குறித்தும் கேட்டறிந்தார்.  இந்த ஆய்வின் போது காவல்துறை துணைத் தலைவர் துரை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த், மாவட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் நமச்சிவாயம், திருப்பத்தூர் சரக காவல் துணை கண்காணிப்பாளர் ஆத்மநாபன், திருப்பத்தூர் நகர் காவல் ஆய்வாளர் கலைவாணி, ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், செல்வபிரபு உள்ளிட்ட போலீசார் இருந்தனர்.