காவல் நிலையத்தில் சிசிடிவி கேமிராக்களை பராமரிக்காதது ஏன்? உயர் நீதிமன்றம் கேள்வி!

காவல் நிலையத்தில் சிசிடிவி கேமிராக்களை பராமரிக்காதது ஏன்? உயர் நீதிமன்றம் கேள்வி!

மகனின் காலை உடைத்த காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி தாய் தொடர்ந்த வழக்கில் காவல் நிலையத்தில் சிசிடிவி கேமிராக்களை பராமரிக்காதது ஏன்? என  உயர் நீதிமன்ற மதுரை கிளை கேள்வியெழுப்பியுள்ளது. 

அவரது தாயார் உலகஜோதி நூர் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனு, "எனது மகன் சையது இஸ்மாயில் மதுரையில் உள்ள தனியார் கல்லூரியில் பட்டப் படிப்பு படித்து வந்த போது மாவட்ட அளவிலான வாலிபால் வீரராக இருந்தார். என் மகன் மீது மதுரை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்ததால், அவரை சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலைக்கு சேர்த்தோம், அங்கு பணி புரிந்தவர் கடந்த செப்டம்பர் 3ம் தேதி மதுரை வந்தார். 

இந்நிலையில், செப்டம்பர் 4ம் தேதி இரவு வீட்டில் தூங்கி கொண்டிருந்த போது, மதுரை காவல்துறை ஆணையரின் சிறப்பு பிரிவில் உள்ள SI சிவா, காவலர் காமராஜ் உள்ளிட்ட சில காவலர்கள் அத்துமீறி வீட்டிற்குள் நுழைந்த என் மகனை கைது செய்ததோடு, எனது செல்போனையும் பிடுங்கி சென்று  விட்டனர். இதனையடுத்து எனது மகனின் நண்பர்களான சேக் முகம்மது, விஜய், முகமது இஸ்மாயில் உள்ளிட்ட 5 பேரையும் கைது செய்தனர். 

எனது மகன் மற்றும் அவனது நண்பர்களை சட்டவிரோதமாக கைது செய்த காவல்துறையினர் கடுமையாக தாக்கி கால்களை உடைத்துள்ளனர். மாஜிஸ்திரேட் முன்பு காவல்துறையினர் தன்னை சித்ரவதை செய்து கால்களை உடைத்ததாக எனது மகன் வாக்குமூலம் அளித்தார். காவல்துறையினரின் இந்த செயல் மனிதநேயமற்றது. அப்பட்டமான மனித உரிமை மீறலாகும்" என தெரிவித்திருந்தார். 

மேலும், தனது மகனை துன்புறுத்தி கடுமையாக தாக்கியதற்கான ஆதாரங்களான மதுரை பழைய காவல்துறை ஆணையர் அலுவலகம் மற்றும் மதுரை கரிமேடு காவல் நிலையம் ஆகியவற்றின் செப்டம்பர் 4ம் தேதி முதல் 7ம் தேதி வரையிலான சிசிடிவி காட்சிகளை இந்த வழக்கு முடியும் வரையில் பாதுகாக்க  வேண்டும் என தனது மனுவில் தெரிவித்திருந்தார்.

இந்த மனு நீதிபதி இளங்கோவன் முன் விசாரணைக்கு வந்தது. விசாரணையில் மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் முகமது அலி  ஜின்னா, வாலிபரை சட்டவிரோதமாக காவலர்கள் தூக்கிக்கொண்டு போய்  அலுவலகத்தில் வைத்து கட்டையால் காலை உடைத்துள்ளனர். எனவே கரிமேடு காவல் நிலையத்திலும் பழைய காவல்துறை ஆணையர் அலுவலகத்திலும் உள்ள சிசிடிவி பதிவாகியுள்ளது எனவே அதனை பாதுகாக்க உத்தரவிட வேண்டும் என வாதிட்டார்.

அப்போது நீதிபதிகள் காவல் நிலையத்திலும், பழைய காவலர் ஆணைய அலுவலகத்திலும் சிசிடிவி கட்சிகள் உள்ளதா? என கேள்வி எழுப்பினர்.

இதற்கு காவல்துறை தரப்பில், மதுரை கரிமேடு காவல் நிலையத்தில் உள்ள சிசிடிவி யின் ஹார்ட் டிஸ்க் இல்லை என தெரிவிக்கப்பட்டது.

இதனை கேட்ட நீதிபதிகள், ஒவ்வொரு காவல் நிலையத்திலும் சிசிடிவி கேமராக்கள் கட்டாயம்  இருக்க வேண்டும் எனவும் அவற்றின் பதிவுகள் 6 மாத காலம் கட்டாயம் பராமரிக்கப்பட வேண்டும் எனவும் உச்ச நீதிமன்ற உத்தரவு உள்ள நிலையில் எவ்வாறு இதுபோன்று பதிலளிக்கிறீர்கள்? எனக் கேள்வி எழுப்பினர் அதற்கான காரணம் என்ன? என்றும் கேள்வி எழுப்பினார்.

இதனைத் தொடர்ந்து மதுரை பழைய காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் உள்ள சிசிடிவி காட்சி பதிவுகளை மனுதாரர் கோரும் சம்பவ நாளன்று பதிவுகளை பாதுகாக்க வேண்டும் என மதுரை மாநகர காவல் துறை ஆணையருக்கு உத்தரவு பிறப்பித்த நீதிபதி சம்பவம் குறித்து காவல்துறை ஆணையர் தரப்பில் பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர்.

இதையும் படிக்க: பணியில் உயிர் நீத்த காவலர்களுக்கு காவலர் வீரவணக்க நாள்...!