தமிழ்நாடு

விசுவாசத்திற்கும், அதிகாரத்திற்கும் மத்தியில் சிக்கிய அப்பாவி பயணிகள்...

Malaimurasu Seithigal TV

சென்னையில் இருந்து கோவை செல்லும் கோவை எக்ஸ்பிரஸ் ரயில் இன்று காலை 6.15 மணிக்கு புறப்பட்டுச் சென்றது. நூற்றுக்கணக்கானோர் பயணித்த இந்த ரயில் கோவை சென்றடைய 8 மணிநேரம் ஆகும் என்பதால் பயணிகள் தங்களுக்கு தேவையான உணவுகளை முன்கூட்டியே ஆர்டர் செய்து விட்டு காத்திருந்தனர்.

ரெயில்வே உணவக ஊழியர்கள் வருவார்கள் வருவார்கள் என வெகு நேரமாக காத்திருந்தும் தண்ணீர், டீ, காபி உள்பட எதுவுமே வராததால் அவர்கள் விரக்தியடைந்தனர். அப்போது, அந்த ரயிலில் உணவுப் பெட்டியில் பணிபுரியும் ஊழியர்கள் ஒருவர் கூட கிடையாது என்று பின்னர்தான் தெரியவந்தது.

என்ன நடந்தது என தெரியாமல் முழித்த நேரம், ஒரு ஆச்சிரிய சம்பவம் பற்றி தகவல் தெரிய வந்துள்ளது.

திடீர் சோதனையால் வந்த வேதனை:

சென்ட்ரலில் இருந்து கிளம்பிய அடுத்த அரைமணி நேரத்தில் ஐ.ஆர்.சி.டி.சி. மேற்பார்வையாளர் ஒருவர் திடீரென பேன்ட்ரி கார் உணவகப் பெட்டியில் திடீர் சோதனை செய்திருக்கிறார். அப்போது ரயிலில் உணவக பெட்டியில் இருந்த மேலாளர் நெடுஞ்செழியன் என்பவர் ஐ.டி.கார்ட் போடவில்லை என்ற ஒரே காரணத்துக்காக ரெயிலில் இருந்து இறக்கி விடப்பட்டார். 

விசுவாசம் காட்டிய ஊழியர்கள்:

தங்கள் மேலாளரை இறக்கி விட்டதை அறிந்து கொண்ட ஊழியர்கள் ஐ.ஆர்.சி.டி.சி. மேற்பார்வையாளரிடம் வாக்குவாதம் செய்தனர். ஆனால், ஊழியர்களின் சரமாரி கேள்விகளுக்கு அந்த அதிகாரிகள் பிடிகொடுக்காத காரணத்தால், ஊழியர்களுக்கு கோபம் வந்துள்ளது.

கொந்தளித்த ஊழியர்கள் ரயிலில் உள்ள சமையல் பாத்திரங்கள், கேஸ்-அடுப்பு மற்றும் ஏற்கெனவே சமைத்து வைக்கப்பட்ட உணவுப் பொருட்களை அள்ளிக் கொண்டு அரக்கோணத்தில் இறக்கி வைத்தனர்.

சாது மிரண்டால்...

காலையில் போடப்பட்ட மெதுவடை, இட்லி, பிரியாணி, கூல்ட்ரிங்ஸ்-சில் தொடங்கி, தண்ணீர் கேன் வரை அனைத்தையும் தூர்வாரியதால் ஒரு கம்பார்ட்மெண்ட்டே காலியானது. 
 
மேற்பார்வையாளரை பழிவாங்கும் ரீதியில் அந்த ஊழியர்கள், தங்கள் கையால் சமைத்த உணவு பார்சல்களை குப்பையில் தூக்கி வீசி எதிர்ப்பை காட்டினர். 

விசுவாசத்திற்கும், அதிகாரத்திற்கும் மத்தியில் சிக்கிய அப்பாவி பயணிகள்...

மேலாளருக்கு விசுவாசம் காட்டுவதற்காக ஊழியர்கள் செய்த இந்த சம்பவம் குறித்த எந்த தகவல்களுமே அறியாத அப்பாவி பயணிகள், ஆர்டர் செய்த உணவு பொருட்களுக்கு காத்திருந்து பசியோடு 8 மணி நேரமும் பயணம் செய்தனர்.

இந்த சம்பவம் நெகிழ வைக்கிறதா அல்ல, கவலை தருகிறதா, இல்லை கோபமடைய வைக்கிறதா என்ற குழப்பம் அனைவரிடமும் கிளம்பியுள்ளது.