தமிழ்நாடு

இருளில் வசிப்பவர்களுக்கு விடியல் கிடைக்குமா? முதலமைச்சரிடம் கண்ணீர் மல்க கோரிக்கை!

Tamil Selvi Selvakumar

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே வசித்து வரும் தெருக்கூத்து கலைஞர்கள், தங்கள் கிராமத்திற்கு அடிப்படை வசதிகள் செய்து தரும்படி அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். 

சிவகங்கை கோட்டை வேங்கை பட்டி கண்மாய் பகுதியில் 20 வருடங்களாக வாழ்ந்து வந்த 26 குடும்பங்களை சேர்ந்த தெருக்கூத்து கலைஞர்களை, 2018-ம் ஆண்டு கஜா புயல் சீற்றத்தின் போது, சமூக ஆர்வலர்கள் வெளியே கொண்டு வந்து, சேவுகப் பெருமாள் கோயில் வளாகத்தில் தங்க வைத்தனர். அதன் பின் வருவாய்த்துறை அதிகாரிகள் இவர்களிடம் ஆய்வு செய்து, எஸ்.மாம்பட்டி பகுதியில் இரண்டரை செண்ட் இடம் ஒதுக்கி தங்க வைக்கப்பட்டுள்ளனர். 

மூன்று வருடப் போராட்டத்திற்கு பிறகு, கடந்த 2021-ம் ஆண்டு இவர்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டுள்ளது. ஆனால், இது வரை அந்த பகுதிக்கு  எந்த அடிப்படை வசதியும் செய்து கொடுக்கப்படவில்லை என குற்றம்சாட்டப்படுகிறது. 

வீட்டு மனை பட்டா கிடைத்தும், கடந்த 4 வருடங்களாக இப்பகுதியில் மின்சாரம், சாலை, கழிப்பறை போன்ற எவ்வித அடிப்படை வசதியும் செய்து தரப்படவில்லை எனக் கூறுகின்றனர் அங்கு வசிக்கும் மக்கள். மேலும் பள்ளி செல்லும் சிறுவர் சிறுமிகள்  படிக்க முடியாமல் கடும் சிரமத்தை அனுபவித்து  வருகின்றனர்.

இது குறித்து அதிகாரிகளிடம் பல முறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறும் மக்கள், முதலமைச்சர் மு.கஸ்டாலின் தங்கள் வாழ்விற்கு  விடியல் தர வேண்டும் என கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர். 

4 வருடங்களாக இருளில் வசித்து வரும் இப்பகுதிக்கு முதலமைச்சர் உரிய அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.