தமிழ்நாடு

வைக்கம் நூற்றாண்டு விழா ஓராண்டு நடைபெறும் - முதலமைச்சர் அறிவிப்பு!

Tamil Selvi Selvakumar

வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு விழா தமிழ்நாடு அரசால் ஓராண்டு கொண்டாடப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் கூறியிருக்கிறார்.

சட்டப்பேரவையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 110 விதியின் கீழ் சில அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், தந்தை பெரியார் வழி நடத்திய, சமூக சீர்த்திருத்த வரலாற்றில் முக்கிய இடம் பிடித்த வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு விழா குறித்து பேசினார். 

இதில் வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா ஓராண்டு முழுவதும் கொண்டாடப்படும் என்றும், வைக்கம் போராட்டம் நடைபெற்ற மார்ச் 30-ம்  நாள் தொடங்கி வைக்கம் நூற்றாண்டு விழா தமிழகத்தில் நடத்தப்படும் என்றும், மேலும், ஏப்ரல் 1 ஆம் தேதி கேரள அரசால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழாவில், கேரள முதலமைச்சருடன், தானும் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்க உள்ளதாகவும் கூறினார்.

தொடர்ந்து, பெரியார் போராடியதை நினைவு கூரும் வகையில், பிற மாநிலங்களில் ஒடுக்கப்பட்டவர்கள் நலனுக்காக பாடுபட்டு, குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும் ஆளுமைகள் அல்லது நிறுவனங்களுக்கு ஆண்டுதோறும் “வைக்கம் விருது” சமூகநீதி நாளான செப்டம்பர் 17ஆம் நாளன்று தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.