ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத் தேர்தலில், நாம் தமிழர் கட்சி சார்பில் பெண் வேட்பாளர் நிறுத்தப்படுவார் என சீமான் தெரிவித்துள்ளார்.
ஆலோசனைக் கூட்டம் :
ஈரோடு கிழக்கு தொகுதி இடைதேர்தலில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக பொறுப்பாளர்களை நியமிக்கும் வகையில், அனைத்து மாவட்ட பொறுப்பாளர்களுடன் கலந்தாய்வு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. சென்னை வளசரவாக்கத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்தில், முதல் கட்டமாக சென்னை, திருவள்ளூர் ,காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர் ,திருப்பத்தூர், விழுப்புரம் , கள்ளக்குறிச்சி, வேலூர், திருவண்ணாமலை, பாண்டிச்சேரி, கடலூர் ஆகிய மாவட்ட பொறுப்பாளர்களுடன் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.
பெண் வேட்பாளர் நிறுத்தப்படுவார் :
ஆலோசனைக் கூட்டத்திற்கு முன்னதாக, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் பெண் வேட்பாளரை நிறுத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாகவும், ஜனவரி 29ம் தேதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் குறித்து அறிவிப்பு வெளியாகும் எனவும், எத்தனை அணி இருந்தாலும் நாங்கள் அவர்களை எதிர்த்து தனித்து நின்று மட்டுமே போட்டியிடுவோம். ஏனென்றால், வெல்லவேண்டும் என்பது தான் எங்கள் இலக்கு, எங்களை போன்று தனித்து நிற்க யாரும் முன்வர மாட்டார்கள் என்றும் தெரிவித்தார்.
இதையும் படிக்க : ரூ.230 கோடி மதிப்பீட்டில் கிங்ஸ் பன்னோக்கு மருத்துவமனை...நேரில் ஆய்வு செய்த முதலமைச்சர்!
அநியாய படை :
மேலும், தமிழ்நாட்டில் தேர்தல் ஆணையத்தின் பறக்கும் படை, அநியாய படையாக செயல்பட்டு வருவதாக குற்றம் சாட்டிய சீமான், ரகசியமாக வீடு வீடாக சென்று பணம் கொடுக்கும் கட்சிக்காரனை விட்டுவிட்டு, மளிகை கடைக்கு எடுத்துச் செல்லக்கூடிய பணத்தை பிடுங்கி வைத்துக் கொள்வதாக சாடினார்.
நம்பிக்கை இருந்தால் பணம் தரமாட்டார்கள் :
தொடர்ந்து பேசிய அவர், ஆளும் கட்சி தான் ஜெயிக்கும் என்ற மாயையை கட்டமைத்து விடுகின்றனர். ஆனால், மக்கள் மாற்றத்தை விரும்பி விட்டால் ஆளும் கட்சி ஜெயிப்பதற்கு வாய்ப்பே இல்லை, திமுகவின் இந்த இரண்டாண்டு ஆட்சி சிறந்த ஆட்சியாக இருந்தால் இந்த இடைத்தேர்தலில் ஒட்டுக்கு பணம் தர மாட்டார்கள் என்று விமர்சித்தார்.