தமிழ்நாடு

கொங்கு மண்டலம் அதிமுக கோட்டையல்ல.... இரட்டை இலை வெற்றிச்சின்னம் இல்லை...!!

Malaimurasu Seithigal TV

இந்தியாவின் முதலாவது முதலமைச்சராக ஸ்டாலின் திகழ்கிறார் எனவும் கிராமபுற வளர்ச்சியில் தான் இந்தியாவின் வளர்ச்சி உள்ளது எனவும் காரையூரில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேசியுள்ளார்.

பொதுக்கூட்டம்:

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே காரையூரில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினின் 70 வது பிறந்தநாளை முன்னிட்டு திமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது.  விழாவில் கலந்து கொண்ட பெண்களுக்கு சேவைகள் வழங்கி பேசிய தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பின்வருமாறு பேசியுள்ளார்.

எடைத்தேர்தல்:

ஈரோடு இடைத்தேர்தல் 21 மாத கால திமுக ஆட்சியை எடை போடும் எடைத்தேர்தலாக அமைந்துள்ளது எனவும் கொங்கு மண்டலம் எங்களது என்று சொன்னவர்களுக்கெல்லாம் அவர்களுக்கும் கொங்கு மண்டலத்திற்கும் சம்பந்தமில்லை என்று நிரூபிக்கின்ற தேர்தலாக அமைத்துள்ளது எனவும் கூறியுள்ளார்.  மேலும் இரட்டை இலை தோல்வியை சந்திக்காத இலையா என்ன? எனக் கேள்வியை எழுப்பிய அவர் எத்தனையோ தேர்தலில் தோல்வியை சந்தித்துள்ளது எனவும் இரட்டைஇலை வெற்றிச்சின்னம் இல்லை எனவும் பேசியுள்ளார்.  

முதன்மையான..:

தொடர்ந்து பேசிய அவர் உதய சூரியன் சின்னம் மக்கள் மனதில் இடம்பெற்றுள்ள சின்னம் எனவும் இந்தியாவிலேயே முதன்மையான முதலமைச்சர் என்கிற பெருமையை தமிழ்நாட்டிற்கு பெற்றுத் தந்துள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின் எனவும் தெரிவித்துள்ளார்.  பத்தாண்டு காலக்கட்டத்தில் அதிமுக விட்டுச்சென்ற பணிகளை தற்போது திமுக சேர்த்து செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் ஐந்தாண்டு காலத்தில் மக்களுக்கு நல்ல பல திட்டங்களை கொண்டு வருவோம் எனவும் கூறிய அமைச்சர் ரகுபதி கிராமபுற முன்னேற்றத்தில்தான் இந்தியாவின் முன்னேற்றமே உள்ளது எனவும் கூறியுள்ளார்.