கரும்பு கொள்முதலில் நடைபெறும் முறைகேடுகளைத் தடுக்க, அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
எடப்பாடி பழனிசாமி அறிக்கை:
கரும்பு கொள்முதலில் நடைபெறும் முறைகேடுகளை தடுப்பது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பில் வழங்கப்படும் கரும்புகளை, கொள்முதல் செய்ய அரசு சார்பில் ஒரு கரும்புக்கு 33 ரூபாய் வீதம், 2 கோடியே 19 லட்சம் கரும்புகள் கொள்முதல் செய்வதற்கு 72 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஆனால், மாநிலம் முழுவதும் அதிகாரிகளும், இடைத்தரகர்களும் இணைந்து ஒரு கரும்புக்கு 15 ரூபாய் முதல் 18 ரூபாய் வரை மட்டுமே விவசாயிகளுக்கு வழங்குவதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
எனவே கரும்பு கொள்முதலில் நடைபெறும் முறைகேடுகளைத் தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள அவர், கரும்பு விலையான 33 ரூபாயும் முழுமையாக விவசாயிகளுக்கே சென்று சேருவதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
அவ்வாறு முழு தொகை சென்றடைய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அதிமுக சார்பாக ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று எடப்பாடி பழனிச்சாமி தனது அறிக்கையில் எச்சரித்துள்ளார்.