தமிழ்நாடு

”சுருக்கு பையில் பணம் இருந்தால் நிமிர்ந்து நடப்பேன்” இதைவிட பெருமை வேண்டுமா?- முதலமைச்சர்

Tamil Selvi Selvakumar

சுருக்கு பையில் பணம் இருந்தால் நிமிர்ந்து நடப்பேன் என பெண் சொல்லும்போது, இந்த திட்டத்திற்கு இதைவிட பெருமை என்ன இருக்கிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

பேரறிஞர் அண்ணாவின் 115 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு காஞ்சிபுரத்தில் உள்ள பச்சையப்பன் கல்லூரி மைதானத்தில் கலைஞர் உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு க ஸ்டாலின் தொடங்கி வைத்து, முதற்கட்டமாக 13 பயனாளிகளுக்கு கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்திற்கான ஏடிஎம் அட்டையை வழங்கினார். 

அதனைத் தொடர்ந்து மேடையில் பேசிய முதலமைச்சர் மு க ஸ்டாலின், மகளிர் உரிமைத் திட்டத்தை தொடங்கும் இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் சொல்கிறேன், இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு பெண்கள் உரிமைத் தொகை பெறுகிறார்களோ அத்தனை ஆண்டுகளுக்கும் இந்த ஸ்டாலின் தான் ஆள்கிறான் என்று பொருள் என கூறினார். 

தொடர்ந்து பேசிய அவர், சுருக்கு பையில் பணம் இருந்தது என்றால் நிமிர்ந்து நடந்து போவேன் என்று ஒரு பெண் கூறியிருக்கிறார். இதைவிட இந்தத் திட்டத்திற்கும், எனக்கும் வேறு என்ன பெருமை வேண்டும்? அண்ணா பிறந்தநாளில் கலைஞர் நூற்றாண்டில் செயல்படுத்துகின்ற இந்தத் திட்டத்திற்கு, இதைவிட என்ன பாராட்டு இருக்க முடியும் என்றார். மேலும், தி.மு.க.வுடைய தேர்தல் அறிக்கையில் அறிவித்த வாக்குறுதி, மிகவும் முக்கியமான வாக்குறுதி. ஆனால், இந்த திட்டத்தை நிறைவேற்ற முடியாது என பொய் பரப்புரையை செய்து வந்தனர். ஆட்சிக்கு வந்தவுடன் செய்திருப்போம், ஆனால் நிதிநிலைமை சரியில்லாததால், சரிசெய்துவிட்டு தற்போது கொடுக்கின்றோம். ஒன்றை அறிவித்துவிட்டால், நிறைவேற்றிக் காட்டுவான் இந்த ஸ்டாலின் என்று தமிழ்நாட்டு மக்களான உங்களுக்கு தெரியும் என்று கூறினார். 

பெண்களுக்கு கல்வியறிவு மறுக்கப்பட்டது, உழைப்பு நிராகரிக்கப்பட்டது, வீட்டுப்படியை தாண்டக் கூடாது, அடுப்பூதும் பெண்ணுக்கு படிப்பெதற்கு? என்று எல்லாம் கூறினார்கள் இன்று அந்த நிலை மாறியுள்ளது. இருப்பினும், குழந்தைத் திருமணங்களை ஆதரித்து பேசுகின்ற பிற்போக்குவாதிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு திராவிட இயக்கத்தின் மேல் வெறுப்பும், தீராத கோபமும் இருக்கதான் செய்யும். ஏனென்றால் இனி சிறுமிகளுக்கு திருமணம் செய்து வைக்க முடியாது. பெண் குழந்தைகள் அனைவரும் படிப்பதற்காக பள்ளி, கல்லூரிக்கு வந்துவிட்டார்கள். இனி உனக்கு படிப்பு எதற்கு என்று கேட்க முடியாது. நீ வேலைக்கு போகக் கூடாது என்று யாரும் தடுக்க முடியாது. இந்தச் சமூக சீர்திருத்த காலத்தை உருவாக்கியதே திராவிட இயக்கம் தான் என்று பெருமைப்பட கூறினார்.

<iframe width="853" height="480" src="https://www.youtube.com/embed/00SZY3ZEM-U" title="