தமிழ்நாடு

கொரோனா ஊரடங்கு விடுமுறை...சிறப்பு விடுப்பாக கருதி அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு!

Tamil Selvi Selvakumar

கொரோனா ஊரடங்கு காலத்தில் அரசு ஊழியர்கள் பணிக்கு வராத காலத்தை பணிக்காலமாக / தகுதியுள்ள அல்லது சிறப்பு விடுப்பாக அனுமதித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

கொரோனா தொற்று பரவல் காரணமாக நாடு முழவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில், கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் தமிழ்நாட்டில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு அடுத்தடுத்து ஊரடங்கானது தொடர்ந்து கொண்டே இருந்தது. 

அதிலும் குறிப்பாக மருத்துவம், பேரிடர் மேலாண்மை, காவல்துறை,  கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு, மின்சாரம், குடிநீர் வழங்கல் தலைமை செயலகம், கருவூலங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய துறைகள் தவிர்த்து பிற துறைகளுக்கு விடுப்பு வழங்கப்பட்டது. 

இந்நிலையில் கடந்த 2021ம் ஆண்டு மே 10 தேதி முதல் ஜூலை 4ம் தேதி வரை ஊரடங்கு காலத்தில் விடுமுறை அளிக்கப்பட்டிருந்த பிற துறைகளை சார்ந்த ஊழியர்களுக்கு, விடுமுறை அளிக்கப்பட்ட காலத்தை பணிக்காலமாக கருதி தகுதியுள்ள அல்லது சிற்ப்பு விடுப்பாக அளித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 

இந்த அரசாணையில், அரசு ஊழியரோ அல்லது அவரது குடும்ப உறுப்பினர்களோ கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனிமை படுத்தப்பட்டிருந்தாலோ அல்லது கட்டுப்பாட்டு மண்டலங்களுக்குள் வசித்தாலோ அந்த தனிமை படுத்தப்பட்ட காலம் சிறப்பு விடுமுறை காலமாக கருத வேண்டும் எனவும், தமிழ்நாடு அரசின் பெண் பணியாளர்களை பொறுத்தவரை கர்ப்பிணி பெண் ஊழியர்களுக்கு விடுமுறை காலமாக கருதப்படும் எனவும், தலைமை செயலக பணியாளர்களை பொறுத்தவரை கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள், நோய்வாய்ப்பட்ட பணியாளர்களுக்கு விடுமுறையாக அறிவிப்பது குறித்து அந்தந்த துறை செயலாளர்களே முடிவெடுக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.