தமிழ்நாடு

கால்பந்து விளையாட்டு வீராங்கனை உயிரிழப்பு...! விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு...!

Malaimurasu Seithigal TV

அரசு மருத்துவமனையின் தவறான சிகிச்சை காரணமாக   கால்பந்து விளையாட்டு வீராங்கனை பிரியா உயிரிழந்த விவகாரம் தொடர்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தமிழக சுகாதாரத் துறைக்கு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது

மாணவிக்கு என்ன பிரச்சனை?

சென்னை வியாசர்பாடி சேர்ந்த கல்லூரி மாணவியும், கால்பந்து விளையாட்டு வீராங்கனையுமான பிரியா, கால் மூட்டு வலிக்காக  பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்தார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஜவ்வு கிழிந்திருப்பதால் சிறிய அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்ற பரிந்துரையின் பேரில், மருத்த்வர்கள் சோமசுந்தரம், பால் ராம்சங்கர் ஆகியோர் அறுவை சிகிச்சை செய்திருக்கிறார்கள். 

தவறான சிகிச்சை:

அதன் பிறகும் வலி தீராததால், சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், உயிரை காப்பாற்ற காலை அகற்ற வேண்டும் எனக் கூறி காலை அகற்றியுள்ளனர்.

சிகிச்சை பலனளிகாமல் உயிரிழப்பு : 
 
தொடர் சிகிச்சையில் இருந்த பிரியா, சிகிச்சை பலனளிக்காமல் நேற்று உயிரிழந்தார். பெரியார் நகர் மருத்துவர்களின் கவனக்குறைவு காரணமாக கால்பந்து விளையாட்டு வீராங்கனை உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மருத்துவர்கள் மீதான நடவடிக்கை : 

இச்சம்பவம் தொடர்பாக பெரியார் நகர் அரசு புறநகர் மருத்துவமனை மருத்துவர்களான சோமசுந்தரம் மற்றும் பால் ராம்சங்கர் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மாநில மனித உரிமை ஆணையம் விசாரணை :

இந்த சம்பவம் தொடர்பாக நாளிதழ்களில் வெளியான செய்தியின் அடிப்படையில் தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணைய தலைவர் பாஸ்கரன், தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டார்.
 
அறிக்கை தாக்கல் :

இந்த சம்பவம் தொடர்பாக 6 வாரங்களில் விரிவான அறிக்கை அளிக்க வேண்டும் என்று தமிழக சுகாதாரத் துணைச் செயலாளருக்கு உத்தரவிட்ட மனித உரிமை ஆணையம், இதுகுறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யும்படி மனித உரிமை ஆணையத்தின் புலன் விசாரணை குழுவுக்கும் உத்தரவிட்டுள்ளது.