தமிழ்நாடு

வேளாண் மாணவர்களுக்கு மீன், நண்டு வளர்ப்பு பயிற்சி...

பண்டித ஜவகர்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவர்களுக்கு கொடுவா மீன், கல் நண்டு வளர்ப்பு குறித்தும், கடல் மீனைக் காண்டு, மீன் குஞ்சுகளை உற்பத்தி செய்யும் முறை குறித்தும், விற்பனை குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.

Malaimurasu Seithigal TV

காரைக்கால் : விவசாயக் கல்லூரி மாணவ மாணவியருக்கு கொடுவா மீன், கல் நண்டு வளர்ப்பு பயிற்சி காரைக்கால் பண்டித ஜவஹர்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி  நிலையத்தின் மாணவ மாணவியருக்கு சீர்காழி அருகே தொடுவாய் கிராமத்தில் இயங்கும் ராஜிவ் காந்தி நீர் வாழ் உயிரின ஆராய்ச்சி மையத்தில் கொடுவா மீன், கல் நண்டு வளர்ப்பு பற்றிய ஒருநாள் பயிற்சி அளிக்கப்பட்டது.

இதில் மீன் குஞ்சுகள் உற்பத்தி செய்யவதற்கு தேவையான மீன்களை கடலில் இயற்கையான சூழலிலிருந்து பிடித்து கொண்டுவந்து, தனிமை படுத்தி, விஷக்கிருமிகளை நீக்கி, தூய்மை செய்து, அவற்றை பாதுகாப்பாக பராமரிக்கும் முறைகள் குறித்தும், அவ்வாறு வளர்க்கப்பட்ட தாய் மீன்களை செயற்கையாக கருவூட்டல் மற்றும் குஞ்சு பொறித்தல் குறித்தும், சரியான தீனி கொடுத்து குஞ்சுகளை ஊட்டம் ஏற்றி, தரம் பிரித்து விற்பனைக்கு தயாராக்கி விவசாயிகளுக்கு விற்பது குறித்தும் மாணவர்களுக்கு விவரிக்கப்பட்டது.

கல் நண்டுகளின் குஞ்சுகளை உற்பத்தி செய்யும் தொழில்நுட்பம் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது. பொறிபகத்தில் உற்பத்தியாகும் கல் நண்டு குஞ்சுகளின் பிழைக்கும் திறன் தான் உலகளவில் மிக அதிகமானது உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

கல் நண்டு உற்பத்தி செய்யும் விவசாயிகள் ஒரு ஏக்கரிலிருந்து எட்டு மாதத்தில் சுமார் பத்து லட்சம் ரூபாய் வரையிலும் கொடுவா மீன் உற்பத்தி செய்யும் விவசாயிகள் ஆறு மாதத்தில் ஒரு ஏக்கரிலிருந்து மூன்று லட்சம் ரூபாய் லாபம் ஈட்ட முடியும்.

பண்டித ஜவஹர்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி  நிலையத்தின் இணைப் பேராசிரியர் டாக்டர் எஸ்.ஆனந்த்குமார் தலைமையில் நடைபெற்ற பயிற்சியில் வேளாண் கல்லூரி மாணவ மாணவிகள் 40 பேர் கலந்துகொண்டு பயிற்சி பெற்றனர்.