சென்னையில் மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணிக்கான கால அவகாசத்தை நீட்டித்து மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.
இயல்பு வாழ்க்கை முடக்கம்:
சென்னையை பொறுத்தவரை கடந்தாண்டு வடகிழக்கு பருவமழையின்போது, ஆங்காங்கே மழைநீர் தேங்கி சென்னையின் முக்கிய பகுதிகள் அனைத்தும் வெள்ளக்காடாக தோன்றியது. இதனால் அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது.
தமிழக அரசுக்கு பரிந்துரை:
இதையடுத்து, வருங்காலங்களில் மழை வெள்ள பாதிப்பை தடுக்கும் வகையில், மழை நீர் வடிகால் கட்டமைப்பை மேம்படுத்துதல், மழை நீர் தேங்குவதை தடுத்தல் உள்ளிட்ட திட்டப்பணிகளை வகுக்க, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி திருபுகழ் தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டது. அந்த கமிட்டி, தமிழக அரசுக்கு பல்வேறு பரிந்துரைகளை அளித்தது.
சிங்கார சென்னை 2.0 திட்டம்:
அதன்படி, 1,033.15 கி.மீ., நீளத்துக்கு, 4,070.10 கோடி ரூபாய் செலவில் மழை நீர் வடிகால் கட்டமைப்பு அமைக்கப்பட்டு வருகிறது. அதில் சிங்கார சென்னை 2 பாய்ன்ட் ஜீரோ திட்டத்தின் கீழ் 2 பிரிவுகளாக மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் முதல் பிரிவின் கீழ் 97 சதவீதம் பணிகளும், 2வது பிரிவின் கீழ் 94 சதவீதம் பணிகளும் நிறைவு பெற்றுள்ளன.
மேலும் வெள்ள தடுப்பு பணிகளை பொறுத்தவரை மொத்தமுள்ள 76 புள்ளி 5 கிலோ மீட்டர் தொலைவில், 62 கிலோமீட்டர் அளவுக்கு முடிவுற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணிகளை தொடர கால அவகாசம் நீட்டிப்பு:
இந்தநிலையில் சென்னையில் மழைநீர் வடிகால் பணிகளை முடிக்க நேற்று கடைசி நாளாக இருந்த நிலையில், கனமழை எச்சரிக்கை வரும் வரை , பணிகளை மேற்கொள்ள ஒப்பந்தக்காரர்களுக்கு கால அவகாசத்தை நீட்டித்து சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.