மாணவர்களின் கல்விக் கடன் குறித்த வாக்குறுதியை திமுக அரசு காற்றில் பறக்க விட்டுள்ளதாக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டி உள்ளார்.
திமுக அரசு மாணவர்களின் கல்விக் கடன் குறித்த வாக்குறுதியை பறக்க விட்டுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், தேர்தலின் போது திமுக சார்பில் வெளியிடப்பட்ட வாக்குறுதிகளை பட்டியிட்டுள்ளார்.
இந்த வாக்குறுதிகள் எந்தெந்த தேதிகளில் நிறைவேற்றப்பட்டன என்பது குறித்து முதலமைச்சர் அறிவிப்பாரா? என கேள்வி எழுப்பி உள்ளார். ஆனால், 100 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டதாக முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல் அறிக்கை விடப்பட்டுள்ளதாக விமர்சித்துள்ளார்.
தேர்தலின்போது அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவித்து விட்டு, தற்போது தகுதி வாய்ந்தவர்களுக்கு மட்டுமே எனக்கூறி 57 லட்சம் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதே, வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டு என தெரிவித்துள்ளார்.
மேலும், நீட் விவகாரத்தில் அனிதாவின் மரணத்தை வைத்து அரசியல் செய்வதிலிருந்து தொடங்கி, கல்விக் கடன் ரத்து செய்வது வரை மாணவர்களின் எதிர்காலத்தை தமிழ்நாடு அரசு வஞ்சித்து வருவதாகவும் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டி உள்ளார்.