தமிழ்நாடு

ஈபிஎஸ் எடுத்துள்ள புதுவியூகம்...வீடு வீடாக...ஆர்.பி.உதயகுமார் சொன்ன தகவல்...!

Tamil Selvi Selvakumar

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் குறித்து எடப்பாடி பழனிசாமி தமது ஆதரவாளர்களுடன் நள்ளிரவு வரை ஆலோசனை நடத்தினார்.

இடைத்தேர்தல் :

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 27 ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதையடுத்து தமிழ்நாடு அரசியல் களம் சூடு பிடித்துள்ளது. அனைத்துக் கட்சிகளும் தங்களது நிலைப்பாட்டை தெரிவித்து வரும் நிலையில், எதிர்க்கட்சியான அதிமுக இன்னும் இடைத்தேர்தலுக்கான வேட்பாளரை அறிவிக்க வில்லை. 

ஈபிஎஸ் தரப்பு மனுதாக்கல் :

இதற்கிடையில் அதிமுக தரப்பில் இருந்து ஓபிஎஸ், ஈபிஎஸ் என இரு அணிகளாக போட்டியிட உள்ளதால், அதிமுக சின்னம் யாருக்கு என்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் அதிமுக பொதுக்குழு வழக்கில் இடைக்கால உத்தரவு வழங்கக்கோரி ஈபிஎஸ் தரப்பு மனுதாக்கல் செய்துள்ளது. 

ஈபிஎஸ் ஆலோசனை :

இப்படி அதிமுக கட்சிக்குள் பல்வேறு குளறுபடிகள் உள்ள நிலையில், இடைத்தேர்தலில் வேட்பாளராக யாரை நிறுத்துவது என்பதில் ஈபிஎஸ் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறது. அதன்படி, ஈரோடு மாவட்டம் வில்லரசன்பட்டியில் உள்ள தனியார் ரிசார்ட்டில்  எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், கே.வி. ராமலிங்கம்  செல்லூர் ராஜூ , ஆர்.பி.உதயகுமார் , உடுமலை ராதாகிருஷ்ணன் எஸ்.பி.வேலுமணி , விஜயபாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.  

திண்ணைப் பிரச்சாரம் :

இரவு 7 மணிக்கு தொடங்கிய ஆலோசனை கூட்டமானது நள்ளிரவு 12 மணிக்கு முடிவடைந்தது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.பி.உதயகுமார், எடப்பாடி பழனிசாமியின் தலைமையில் அவருடைய ஆட்சியின் சாதனைகளை வீடு வீடாக திண்ணைப் பிரசாரமாக செய்ய உள்ளோம் என்றும், அது மிகப் பெரிய வெற்றியை தேடித் தரும் என்றும் நம்பிக்கையோடு கூறினார்