தமிழ்நாடு

தமிழ்நாடு பெயரை மறுத்ததால் கமராஜருக்கு நிகழ்ந்தது என்ன..? ஆ.ராசா பேச்சு!

Tamil Selvi Selvakumar

தமிழ்நாடு என்ற பெயரை மறுப்பவர்களின் வீழ்ச்சி தொடங்கியுள்ளதாக திமுக எம்பி ஆ.ராசா தெரிவித்துள்ளார்.

பொங்கல் விழா இசை சங்கமம் :

தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் கலை பண்பாட்டு இயக்கம் சார்பில் பொங்கல் விழாவின் இசை சங்கமத்தின் இரண்டாம் நாள் நிகழ்ச்சி இயல் இசை நாடக மன்ற வளாகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா, அமைச்சர்கள் கயல்விழி செல்வராஜ், மனோ தங்கராஜ், மாநிலங்களை உறுப்பினர் திருச்சி சிவா மற்றும் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்ற தலைவர் வாகை சந்திரசேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து, இந்நிகழ்ச்சியில் தமிழரின் பண்பாட்டை பறைசாற்றும் வகையில் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் அரங்கேற்றப்பட்டது. பின்னர் திருச்சி சிவா மற்றும் அமைச்சர் மனோ தங்கராஜ் இணைந்து நாட்டுப்புற கலைஞர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

வாகை சந்திரசேகர் மேடைபேச்சு :

இதைத்தொடர்ந்து மேடையில் பேசிய தமிழ்நாடு இயல் இசை நாடக மன்ற தலைவர் வாகை சந்திரசேகர், கொடுத்த வாக்கு மற்றும் வாக்குறுதியை காப்பாற்ற கூடியவர் ஆ, ராசா என்று தெரிவித்தார். மேலும் எல்லோரும் பேசி தான் கைதட்டல் வாங்குவார்கள், ஆனால் கலைஞர் அவர்கள் மேடையில் நின்று மைக்கை தட்டினாலே கைதட்டல் குவியும் என்று கூறியவர், இங்கு ஆ. ராசா வந்திருப்பது கலைஞரே வந்திருப்பது போல உணர்கிறேன் என்றார்.

ஆ. ராசா மேடை பேச்சு :

தொடர்ந்து மேடையில் பேசிய ஆ.ராசா, பொங்கல் திராவிட இனத்தின் அடையாளம் என்றும், முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஆட்சி செய்யும் இடத்தில் தமிழ்நாடு உயரும் என்றும் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், முன்னாள் முதலமைச்சர் காமராஜர், தமிழ்நாடு என்ற பெயரை வைக்க மறுத்ததால் வீழ்ச்சியடைந்தார் என்றும், தற்போது சிலர் தமிழ்நாடு என கூற மறுக்கிறார்கள், அவர்களுக்கும் வீழ்ச்சி தொடங்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.