தமிழ்நாடு

கி.மு. முதலாம் நூற்றாண்டை சேர்ந்த அரிய வகை பொருட்கள் கண்டுபிடிப்பு!

Tamil Selvi Selvakumar

காஞ்சிபுரம் மாவட்டம் ஶ்ரீபெரும்புதூர் அருகே நடைபெற்ற அகழ்வாராய்ச்சியில், கி.மு. முதலாம் நூற்றாண்டை சேர்ந்த அரிய வகை பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. 


காஞ்சிபுரம் குன்றத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட நத்தமேடு பகுதியில் கடந்த மே மாதம் 19ஆம் தேதி இரண்டாம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் தொடங்கின. இதில் தங்க ஆபரணத்திலான சிறு தகடு, ராஜராஜ சோழன் காலத்தைய நாணயங்கள், சுடுமண் கருவி, செப்பு பொருட்கள், சுடுமண் பொம்மைகள், செப்பு வளையல்கள் உள்ளிட்ட அரியவகை பொருட்கள் கிடைத்தன.

அகழாய்வு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், தமிழ் - பிராமி எழுத்து பொறிப்புகள் அடங்கிய பானை ஓடுகள், சுடுமண் பெண் உருவம், சுடுமண் முத்திரை, உடைந்த சுடுமண் பொம்மை குவளை, சுடுமண் கழுத்தணி, சூதுபவள மணிகள், இரும்பு மற்றும் செம்பு பொருட்கள் உள்ளிட்ட  800க்கும் மேற்பட்ட அரியவகை பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளது. 

இதில் தமிழ் - பிராமி எழுத்து பொறிப்புகள் உள்ள பானை ஓடுகள் கி.மு. முதலாம் நூற்றாண்டை சேர்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.