தமிழ்நாடு

வருகிறது டெங்கு...முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்!

Tamil Selvi Selvakumar

தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுசுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் அறிவுறுத்தியுள்ளார். 

தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் பரவலை தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து பொதுசுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் அறிக்கை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கேரளாவில் எலி காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சல் அதிகமாக பரவி வரும் நிலையில், தமிழ்நாட்டில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். மேலும், மாவட்ட சுகாதார அலுவலர்கள் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். 

மேல்நிலை, கீழ்நிலை தொட்டிகளை சுத்தமாகவும் குளோரின் கலந்தும் பராமரிக்க வேண்டும் எனவும், மாணவர்களுக்கு காய்ச்சல் பாதிப்பு அறிகுறிகள் கண்டறியப்பட்டால் துணை சுகாதார இயக்குனர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார். 

எல்லையோர மாவட்டங்களில் கண்காணிப்பு பணிகளில் பொது சுகாதாரத்துறை தீவிரப்படுத்த வேண்டும் எனவும், பள்ளி, கல்லூரி வளாகங்களில் கொசு உற்பத்தியாகாமல் தடுத்து ஆய்வை மேற்கொண்டு அதனை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் செல்வ விநாயகம் தெரிவித்துள்ளார்.