காஞ்சிபுரம் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பலி எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.
காஞ்சிபுரம் அடுத்த குருவி மலையில் சிறிய அளவில் பட்டாசு தயாரிக்கும் ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பட்டாசு தயாரிக்கும் ஆலையில் உள்ள குடோனுக்கு வெளியே காய வைக்கப்பட்டு இருந்த பட்டாசின் மூலப்பொருள் திடீரென தீப்பற்றி பெரும் வெடி சத்ததுடன் தீ விபத்து ஏற்பட்டது.
விபத்து ஏற்பட்ட நேரத்தில் ஆலையில் சுமார் 25க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வந்தனர். இதனையடுத்து அப்பகுதி மக்கள் பதறியடித்து ஓடி சென்று தீயை அணைக்க முயற்சி செய்தனர். உடனே தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புதுறையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இருப்பினும், இந்த தீ விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர். மேலும் 7 பெண்கள் உட்பட 14 பேர் தீக்காயங்களுடன் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் 6 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.
இதனை தொடர்ந்து, காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி, டி.ஐ.ஜி பகலவன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.