தமிழ்நாடு

கோயம்பேடு வணிக வளாகத்தில் முடுக்கிவிடப்பட்டுள்ள கொரோனா கட்டுப்பாடுகள்..!

Malaimurasu Seithigal TV

கோயம்பேடு வணிக வளாகத்திற்கு வரும் பொதுமக்கள், பணிபுரியும் தொழிலாளர்கள்  அனைவரும் முகக் கவசம் அணிய வேண்டும், கைகளை சுத்தப்படுத்த வேண்டும் என ஒலிபெருக்கி மூலம் சிஎம்டிஏ நிர்வாகம் அறிவித்து வருகிறது.

சீனா உள்ளிட்ட சில நாடுகளிலும் இந்தியாவின் வட மாநிலங்களிலும் மீண்டும் கொரோனா நோய் தொற்று அதிகரிக்க தொடங்கியுள்ள சூழ்நிலையில் தமிழ்நாடு அரசு கொரோனா நோய் தொற்றை எதிர்கொள்ள பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக சென்னை கோயம்பேடு வணிக வளாகம் முழுவதும் முக கவசம் அணிய வேண்டும் என சிஎம்டிஏ நிர்வாகம் நேற்று வியாபாரிகளுக்கு அறிவுறுத்தி இருந்தது.

இந்நிலையில் வணிக வளாகத்தில் உள்ள ஒலிபெருக்கியின் மூலமாக முக கவசம் அணிய வேண்டும், கைகளை சுத்தப்படுத்திக் கொண்டு இருக்க வேண்டும் என்ற அறிவிப்பு ஒலிபரப்பப்பட்டு வருகிறது. மேலும் சில நாட்களுக்குள் கோயம்பேடு வணிக வளாகத்தில் உள்ள வியாபாரிகள், தொழிலாளர்கள், பொதுமக்கள் என அனைவருக்கும் முக கவசம் வழங்கும் பணியை வியாபாரிகள் நலச்சங்கம் துவங்க உள்ளது.

கடந்த கொரோனா நோய் தொற்றின் போது கோயம்பேடு வணிக வளாகத்தில் பெரிய அளவில் நோய் தொற்று ஏற்பட்டதன் காரணமாக தமிழகத்தில் முதல்முறையாக கோயம்பேடு வணிக வளாகம் முழுமைக்கும் கொரோனா கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட உள்ளது.