தமிழ்நாடு

மத்திய அரசுக்கு எதிராக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்...!

Tamil Selvi Selvakumar

மத்திய பா.ஜ.க. அரசுக்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகிறது.

விலைவாசி உயர்வு, வேலை வாய்ப்பின்மை, இந்தி திணிப்பு என மத்திய அரசு மக்கள் விரோத போக்கில் ஈடுபட்டு வருவதாகக் கூறி சென்னையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில செயலாளர் முத்தரசன் தலைமையில் சென்னை கடற்கரை காவல் நிலையம் அருகே உள்ள தபால் நிலையம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தின் போது மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டது. 

இதன் ஒருபகுதியாக சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள ஸ்டேட் பேங்க் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, விண்ணை எட்டியுள்ள விலைவாசி உயர்வை மத்திய அரசு கட்டுப்படுத்த தவறியதாகக் கூறி முழக்கம் எழுப்பப்பட்டது. 

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் ரயில் நிலையம் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, தடுப்புகளை மீறி ரயில் நிலையத்திற்கு நுழைய முயன்றவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

இதேபோல், தமிழ்நாடு முழுவதும் மத்திய அரசுக்கு எதிராக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.