”மறக்குமா நெஞ்சம்”ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடிகளால் 3 ஐபிஎஸ் அதிகாரிகளை மாற்றி அமுதா ஐஏஎஸ் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னையை அடுத்த பனையூரில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் 30 ஆண்டுகால இசைப் பயணத்தை கொண்டாடும் விதமாக ‘மறக்குமா நெஞ்சம்’ கடந்த செப்டம்பர் 16 ஆம் தேதி பல்வேறு குளறுபடிகளுக்கு மத்தியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியால் அன்றையதினம் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் இசிஆரில் முதலமைச்சரின் வாகனமும் போக்குவரத்து நெரிசலில் சிக்கியது.
அதேபோல், நேற்றையதினம் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நடுரோட்டில் அமர்ந்து போராட்டம் நடத்தினார். இதிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.
இந்நிலையில் பள்ளிக்கரணை காவல் துணை ஆணையர் தீபா சத்யன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல் சென்னை கிழக்கு மண்டல இணை ஆணையர் தீஷா மிட்டலும் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
தொடர்ந்து, சென்னையில் பணியிலிருந்த ஐபிஎஸ் அதிகாரி ஆதர்ஷ் பச்சேரா, நெல்லை கிழக்கு துணை ஆணையராக மாற்றி அமுதா ஐஏஎஸ் அதிரடி உத்தரவிட்டுள்ளார். தி. நகர் துணை ஆணையராக இருந்த ஆதர்ஷ் பச்சோரா அறிவுசார் சொத்துரிமை அமலாக்கப்பிரிவு துணை ஆணையராக கடந்த ஜனவரி மாதம் பணியிட மாறுதல் வழங்கிய நிலையில் தற்போது மீண்டும் பணியிட மாற்றம் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஏ.ஆர்.ரகுமான் நிகழ்ச்சியிலும், அண்ணாமலை போராட்டத்திலும் போக்குவரத்து நெரிசலை சரியாக கட்டுப்படுத்தாத நிலையில், இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.