நடிகர் அஜித்தின் தந்தை சுப்ரமணியத்தின் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
கடந்த 4 ஆண்டுகளாக பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டிருந்த நடிகர் அஜித்தின் தந்தை மணி என்கிற சுப்ரமணியம், சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள தனது இல்லத்தில் இன்று அதிகாலை உயிரிழந்தார். இந்த நிலையில் இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள நடிகர் அஜித் குமார், உறக்கத்திலேயே தனது தந்தை இன்று உயிரிழந்ததாகவும், இதுவரை அவரை அக்கறையுடன் கவனித்து வந்த மருத்துவர்களுக்கு நன்றி எனவும் தெரிவித்தார். மேலும், இறுதிச்சடங்கு குடும்ப நிகழ்வாகவே அமையும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.
இதையும் படிக்க : நாடாளுமன்ற தேர்தலுக்குள் அனைவரும் ஒன்று சேர்ந்து வெற்றி பெறுவோம்...சூளுரைத்த சசிகலா!
இந்நிலையில் சுப்ரமணியம் மறைவு செய்தியைக் கேட்டு வருந்தியதாகவும், அஜித் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டார். தொடர்ந்து முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
நடிகர் அஜித்தின் தந்தை சுப்ரமணியம் மறைவையொட்டி அவரது இல்லத்திற்கு நேரில் சென்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி செலுத்தியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பல்வேறு உதவிகளை சுப்ரமணியம் குடும்பத்தார் செய்ததாக அவர் வீட்டுப் பணியாளர்கள் நினைவு கூர்ந்தனர். மேலும் 7 ஆண்டுகளுக்கு முன்னதாகவே ஓட்டுநர்கள் உள்ளிட்ட வீட்டுப் பணியாளர்களுக்கு 2 படுக்கையறை வசதிகொண்ட வீடுகட்டிக் கொடுத்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்.