வனத்துறை களப்பணியாளர்களின் பயன்பாட்டிற்காக மின்சார வாகனங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு, வனத்துறை களப்பணியாளர்களுக்கு 5 கோடியே 25 லட்சம் ரூபாய் மதிப்பிலான 200 மின்சார வாகனங்கள், 35 மீட்பு வாகனங்களை வழங்கினார்.
தொடர்ந்து, தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தக துறையின் சார்பில், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் கெலவரப்பள்ளி அணையில் இருந்து சிப்காட் தொழில் பூங்காக்கள் மற்றும் பிற தொழிற்சாலைகளுக்கு, மூன்றாம் நிலை எதிர் சவ்வூடு பவரல் முறையில் சுத்திகரிப்பு ஆலை நிறுவுவதற்கும் அடிக்கல் நாட்டினார்.
இதையும் படிக்க : ”முழு ஒத்துழைப்பு உண்டு, ஆனால் எந்த நோக்கத்தில் சோதனை நடக்குது என்று தெரியவில்லை” - செந்தில் பாலாஜி!
இதையடுத்து சிப்காட் சார்பில் 537 பள்ளிகளுக்கு பல செயல்பாட்டு அச்சுப்பொறிகளை கொள்முதல் செய்து வழங்குவதற்காக பள்ளிக்கல்வித்துறைக்கு 50 லட்சம் ரூபாய்க்கான காசோலையினை வழங்கினார். பின்னர் சென்னை காலநிலை மாற்ற செயல் திட்ட அறிக்கையை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மதிவேந்தன், மெய்யநாதன், சுற்றுச்சூழல் கூடுதல் தலைமை செயலாளர் சுப்ரியா சாகு உள்ளிட்ட அரசு உயர்அதிகாரிகள் என பலர் பங்கேற்றனர்.