தமிழ்நாடு

பொய்யான செய்திகளை பரப்பிய 3 பேர் மீது வழக்கு பதிவு...கைது செய்ய தனிப்படைகள் அமைப்பு!

Tamil Selvi Selvakumar

தமிழ்நாட்டில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக பொய்ச் செய்தி பரப்பிய மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் வட மாநில இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று வைரலாகி வந்தது. ஆனால், அந்த காணொலிகள் உண்மையில்லை என்று தமிழ்நாடு அரசு தரப்பில் இருந்து மறுப்பு தெரிவித்து வருகின்றனர். அதேபோல், இங்கு உள்ள வடமாநிலத்தவர்களும் தமிழ்நாட்டில் எங்களுக்கு எந்தவித அச்சுறுத்தலும் நடைபெறவில்லை என்று கூறி வருகின்றனர். இதனால் சமூக வலைதளங்களில் பொய் செய்திகளை பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில் வட மாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவதாக இணையதளத்திலும், சமூக ஊடகங்களிலும் உண்மைக்கு புறம்பான பொய்யான தகவல்களை பரப்பியதாக திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் தெய்னிக் பாஸ்கர் என்ற பத்திரிக்கை ஆசிரியர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

அதேபோல், தன்வீர் போஸ்ட் என்ற பத்திரிகையின் உரிமையாளர் முகமது தன்வீர் மீது திருப்பூர் சைபர் கிரைம் போலீசாரும், தூத்துக்குடி மாவட்டம் சென்ட்ரல் காவல் நிலையத்தில் பிரசாந்த் உமராவ் என்பவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள மூன்று பேரையும் கைது செய்ய தனிப்படைகள் அமைத்துள்ளனர்.