வடமாநிலத் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தி பரப்புபவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் மேம்பாலக் கட்டுமானம், மெட்ரோ ரயில் பணி உட்பட பல்வேறு துறைகளில் வட மாநிலத்தவர்கள் பெருமளவில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவது போன்று சமூக வளைதளங்களில் பரவிய வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து ஆய்வு செய்வதற்காக பீகார், ஜார்க்கண்ட் மாநிலங்களை சேர்ந்த 8 பேர் கொண்ட அதிகாரிகள் குழுவினர் இன்று தமிழ்நாட்டிற்கு வருகை தர உள்ளனர்.
இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் உடன் ஆலோசனை மேற்கொண்டார். இதேபோல, துறை சார்ந்த உயர் அதிகாரிகள் உள்ளிட்டோருடனும் அவர் ஆய்வு நடத்தினார். அப்போது, வடமாநில தொழிலாளர் பிரச்சனையை கையாள்வது மற்றும் அடுத்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுக்கு அவர் ஆலோசனைகளை வழங்கினார்.
இதைத்தொடர்ந்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வடமாநிலத் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தி பரப்புபவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், நாட்டின் ஒருமைப்பாட்டிற்குக் குந்தகம் விளைவிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.