தமிழ்நாடு ஆளுநரை விமர்சித்த திமுக பேச்சாளருக்கு எதிராக நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சர்ச்சையில் சிக்கிய ஆளுநர் :
தமிழ்நாடு என்பதற்கு பதில் தமிழகம் என்று அழைக்க வேண்டும் என ஆளுநர் ரவி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், தமிழ்நாடு சட்டமன்றத்தில் உரையாற்றிய ஆளுநர், சில பகுதிகளை தவிர்த்து பேசியிருந்தார். அதனால், அவருக்கு எதிராக முதலமைச்சர் தீர்மானம் கொண்டு வந்த நிலையில், தேசிய கீதம் இசைக்கப்படும் முன்பே சட்டமன்றத்தில் இருந்து ஆளுநர் வெளியேறினார்.
இதையும் படிக்க : முன்னறிவிப்பின்றி காளைகளை அவிழ்த்துவிட்ட உரிமையாளர்கள்...தாறுமாறாக ஓடிய மாடுகள் முட்டியதில்...நடந்தது என்ன?
அவதூறாக பேசிய திமுக பேச்சாளர் :
இந்த பின்னணியில், சென்னை விருகம்பாக்கத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய திமுக தலைமை கழக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, ஆளுநர் ஆர்.என்.ரவி பற்றி அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.
வழக்கு தாக்கல் :
இதையடுத்து, ஆளுநர் ரவி பற்றி அவதூறு பரப்பும் வகையில் கொச்சையாகவும், மிரட்டல் விடுக்கும் வகையிலும் பேசிய திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது, இந்திய தண்டனை சட்டம் 124 (ஆளுநரை பணி செய்ய விடாமல் தடுத்தல்) பிரிவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.