திருப்பத்தூர் மாவட்டம், நாட்டறம்பள்ளி அருகே நடைபெற்ற எருது விடும் விழாவில் ஏற்பட்ட கலவரத்தில், 10க்கும் மேற்பட்ட காவலர்கள் காயமடைந்தனர்.
எருது விடும் விழா :
திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அருகே உள்ள கல்நார்சாம்பட்டியில் பொங்கல் பண்டிகையை ஒட்டி எருது விடும் விழா நடைபெற்றது. இதில், முன்னறிவிப்பு இன்றி காளைகளின் உரிமையாளர்கள் காளைகளை கழற்றிவிட்டதில், காளைகள் தாறுமாறாக ஓடி பார்வையார்களை முட்டியது. இதில், பெரியகம்மியம்பட்டு பகுதியைச் சேர்ந்த முஷரப் என்ற 19 வயது இளைஞரை மாடு முட்டியதில் காயமடைந்த அவர் கீழே விழுந்துள்ளார். அப்போது கூட்டத்தை கலைக்க காவல்துறையினர் தடியடி நடத்தியுள்ளனர். அதனால் அச்சமடைந்த மக்கள் அங்கும் இங்கும் ஓடியதில் கீழே விழுந்து கிடந்த முஷரப் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
இதையும் படிக்க : நடிகர் வடிவேலு தாயார் மரணம்...ஆறுதல் கூறிய முதலமைச்சர்!
கற்களை வீசிய இளைஞர்கள் :
இந்நிலையில், காவல்துறையினர் தாக்கியதில் இளைஞர் முஷரப் உயிரிழந்ததாக கூறி அப்பகுதி இளைஞர்கள் காவல் துறையினர் மீதும், அவர்களின் வாகனங்கள் மீதும் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதில் 10க்கும் மேற்பட்ட காவலர்கள் காயமடைந்த நிலையில் அங்கிருந்த வாகனங்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன.
இளைஞர்கள் கைது :
இதனையடுத்து சம்பவ இடத்தை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரமேஷ் கண்ணா, வேலூர் சரக டிஐஜி முத்துசாமி நேரில் ஆய்வு மேற்க்கொண்டனர். அப்போது, கலவரத்தில் ஈடுபட்ட 30க்கும் மேற்பட்ட இளைஞர்களை கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.