தமிழ்நாடு

நாளை முதல் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை...விழிப்புணர்வு பேரணி நடத்த உத்தரவு.!

Tamil Selvi Selvakumar

தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் வரும் 17-ம் தேதி முதல் 28ம் தேதி வரை மாணவர் சேர்க்கை கொண்டாட்டம் திட்டம் அமல்படுத்தப்படுகிறது.

தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை கொண்டாட்டம் திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழக பள்ளிக்கல்வித்துறையின் கீழ் 37 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் சுமார் 53 லட்சம் மாணவர்கள் படித்து வருகின்றனர். 2022-2023 கல்வியாண்டுக்கான இறுதி வேலை நாள் வருகிற 28-ந்தேதியுடன் முடிவடைய உள்ளது. 

இந்த நிலையில் தனியார் பள்ளிகளை போல அரசு பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கைக்கான பணிகளை முன்கூட்டியே தொடங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. அதற்கான திட்டமிடுதல், செயல்பாடுகளை பள்ளிக்கல்வித்துறை மேற்கொண்டுள்ளது.

அந்த வகையில் ’அரசுப் பள்ளிகளைக் கொண்டாடுவோம்’ என்ற தலைப்பில் மாணவர் சேர்க்கைக்கான விழிப்புணர்வு பேரணி நாளை முதல் 28-ந்தேதி வரை பேனர்கள், துண்டு பிரசுரங்கள் மூலம் அனைத்து மாவட்டங்களிலும் விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட உள்ளது. 

இதனிடையே, ஒன்றாம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை தங்களது குழந்தைகளைச் சேர்க்க விரும்பும் பெற்றோர் அருகே உள்ள அரசுப் பள்ளிகளுக்குச் சென்று குழந்தைகளின் பெயரை உடனடியாக பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.