தமிழ்நாடு

கள்ளக்குறிச்சி மாணவி தாயார் தாக்கல் செய்த மனு ஒத்திவைப்பு...!

Tamil Selvi Selvakumar

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரண வழக்கை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்கக்கோரிய வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்த வந்த மாணவி கடந்த 2022, ஜூலை 13ம் தேதி மர்மமான முறையில் மரணமடைந்ததால்,  இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. அதன்படி சிபிசிஐடி விசாரித்து வரும் நிலையில், வழக்கை விசாரிக்க உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கக் கோரி மாணவியின் தாயார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், "சிபிசிஐடி விசாரணை நியாயமாக இல்லை எனவும், கொலைக் குற்றச்சாட்டின் கீழ் இன்னும் வழக்குப் பதிவு செய்யப்படவில்லை எனவும், கொலை மற்றும் பாலியல் வன்கொடுமை தொடர்பான ஆதாரங்களை சிபிசிஐடி போலீசார் மறைத்துள்ளனர் எனவும், கண்காணிப்புக் கேமரா பதிவுகள் எனக்கு காட்டப்படாதது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. மேலும், சம்பவம் நடந்த இடம், ஆதாரங்களின் தடயம் தெரியாத அளவுக்கு முழுமையாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது எனவும்” குறிப்பிட்டிருந்தனர்.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, காவல்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சிபிசிஐடி விசாரணை கோரிய வழக்கு நிலுவையில் இருப்பதால், இந்த மனு விசாரணைக்கு உகந்ததல்ல என்று வாதிட்டார். வாதங்களை கேட்டறிந்த நீதிபதி, மாணவியின் தாயார் தாக்கல் செய்த மனுவை, ஏற்கனவே நிலுவையில் உள்ள வழக்குகளுடன் சேர்த்து மார்ச் 8 ஆம் தேதி விசாரணைக்கு ஒத்திவைத்தார்.