அப்துல்கலாம் ஏவுதல் திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்கள் வடிவமைத்த 150 செயற்கைக்கோள்கள் கொண்ட இந்தியாவின் முதல் ஹைப்ரிட் வகை ராக்கெட், வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
மார்ட்டின் அறக்கட்டளை, டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் அறக்கட்டளை மற்றும் ஸ்பேஸ் ஜோன் இந்தியா அமைப்பு ஆகியவை இணைந்து பள்ளி மாணவர்களுக்கு அறிவியல் தொழில் நுட்பம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக பல்வேறு செயல்பாடுகளை முன்னெடுத்து வருகின்றன.
அதன்படி, மாணவர்களை கொண்டு செயற்கைகோள் உருவாக்க திட்டமிட்டு, அதற்கு டாக்டர் அப்துல்கலாம் செயற்கைக் கோள் ஏவுதல் திட்டம் - 2023 என பெயருமிட்டனர். பின்னர் 6 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் 3 ஆயிரத்து 500 மாணவர்கள் மூலம் 150 சிறிய வகை செயற்கைக்கோள்களை தயாரித்தனர். பள்ளி மாணவர்கள் தயாரித்த இந்த செயற்கை கோள்களை, ஸ்பேஸ் ஜோன் அமைப்பு தயாரித்த சவுண்டிங் ராக்கெட் மூலம் ஏவப்படும் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதையும் படிக்க : இணையத்தில் வைரலாகி வரும் நடிகர் மயில்சாமியின் வீடியோக்கள்...!
தொடர்ந்து சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பட்டிப்புலம் என்ற இடத்தில் இருந்து 150 சிறிய செயற்கைக் கோள்கள் சவுண்டிங் ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இது இந்தியாவின் முதல் ஹைப்ரிட் வகை ராக்கெட் என்பது குறிப்பிடத்தக்கது.
இரண்டரை கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்ட இந்த ராக்கெட் 3 மீட்டர் உயரமும், 65 கிலோ எடையும் கொண்டது. தொடர்ந்து விண்ணில் பாய்ந்த இந்த செயற்கைக்கோள்கள், காற்றின் தரம், ஓசோன் படலத்தின் தன்மை, வெப்பநிலை, காற்றின் தரம், கார்பன் அளவு உள்ளிட்ட பல்வேறு தரவுகளை சேகரிக்கும் எனவும், கடலில் விழும் ராக்கெட் பகுதிகளை மீண்டும் பயன்படுத்த இயலும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.