சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் பயிற்சி மருத்துவரை நோயாளி தாக்கியதைக் கண்டித்து மருத்துவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக பணியாற்றி வரும் சூர்யா என்பவர், நேற்று இரவு 1 மணியளவில் கல்லீரல் பிரச்சனை காரணமாக உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்ட பாலாஜி என்ற நோயாளியை பரிசோதனை செய்த போது, தன் கையில் சொருகி இருக்கும் குல்கோஸ் ஊசியினை அகற்றுமாறு நோயாளி பாலாஜி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றவே, பாலாஜி அருகில் இருந்த கத்திரிக்கோலை எடுத்து பயிற்சி மருத்துவர் சூர்யா கழுத்தில் குத்தியுள்ளார். இதில் படுகாயமடைந்த சூர்யா தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.
இதையும் படிக்க : இனி லஞ்சம் வாங்கினால் 10 நாட்களுக்குள் கடும் நடவடிக்கை...எச்சரிக்கை விடுத்த மின்வாரியம்!
இதையடுத்து, பயிற்சி மருத்துவர் தாக்கப்பட்டதை கண்டித்து 100க்கும் மேற்பட்ட பயிற்சி மருத்துவர்கள், மருத்துவமனை வளாகத்தில் திடீர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை முதல்வர் பேரணி ராஜன், பயிற்சி மருத்துவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, மருத்துவ மாணவர்களின் பாதுகாப்பு வருகிற காலங்களில் உறுதிப்படுத்தப்படும் எனவும், தற்பொழுது நடைபெற்ற சம்பவம் தொடர்பாக உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டிருந்த பாலாஜி கைது செய்யப்பட்டு இருப்பதாகவும் கூறி மாணவர்களிடம் சமரசம் பேசியதை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கலைந்து சென்றனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை முதல்வர் பேரணி ராஜன், பயிற்சி மருத்துவர்களின் கோரிக்கை விரைந்து நிறைவேற்றப்படும் எனவும் , இது தொடர்பாக சுகாதாரத் துறை அமைச்சரிடம் தெரிவித்திருப்பதாகவும், மருத்துவமனை மருத்துவரின் பாதுகாப்பிற்காக கூடுதல் காவலர்கள் பணி அமர்த்தப்படுவார்கள் எனவும், வரும் காலங்களில் இது போன்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் அடுத்த கட்ட நடவடிக்கை ஆனது எடுக்கப்படும் எனவும் கூறினார்.
இருப்பினும், ராஜூவ் காந்தி அரசு மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர் தாக்குதலை கண்டித்து பயிற்சி மருத்துவர்களின் 3 மணி நேர திடீர் வேலை நிறுத்த போராட்டம் சற்று பரபரப்பை ஏற்படுத்தியது.