தமிழ்நாடு

கீழடியில் தங்க கம்பி, காளை பொம்மை உள்ளிட்ட பொருட்கள் கண்டெடுப்பு...!

Tamil Selvi Selvakumar

சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெற்ற அகழாய்வில் தங்க கம்பி, காளை உருவ பொம்மை உள்ளிட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் இருந்து சுமார் 18 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கீழ்நமண்டி கிராமத்தில் 30 லட்சம் ரூபாய் செலவில் முதல்கட்ட அகழாய்வு பணிகள் ஏப்ரல் மாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுவரை தோண்டப்பட்ட 11 குழிகளில், 3 ஈம பேழைகள், சிவப்பு மற்றும் கருப்பு - சிவப்பு நிற பானைகள் கண்டெடுக்கப்பட்டன. 12 கால்களுடன் கூடிய ஈமப் பேழைகள், மூன்றரை அடி நீளம், 2 அடி அகலம் மற்றும் ஒரு அடி உயரம் கொண்டவையாக உள்ளன. இந்த பேழைகள் மற்றும் பானைகளை ஆய்வு செய்த பின்னரே இவற்றின் பயன்பாடு குறித்த விவரம் தெரியவரும். 

இந்த கிராமத்தின் வடமேற்கு பகுதியில் சுமார் 2500 ஆண்டுகளுக்கு முந்தைய பெருங்கற்கால இடுகாடு இருப்பதும், இதில் 3 மீட்டர் விட்டம் முதல் 5 மீட்டர் விட்டம் வரையிலான 200-க்கும் மேற்பட்ட கல்வட்டங்கள் இருப்பதும் கண்டறியப்பட்டது. எனவே, இந்த இடுகாட்டின் அருகில் பெருங்கற்கால மனிதர்களின் வாழ்விடம் அமைந்திருக்கலாம் என்ற கோணத்தில் அகழாய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இங்கு கிடைக்கப் பெற்ற பானை ஓடுகள் உள்ளிட்ட பொருட்களை தொல்லியியல் துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். 

இதேபோல், சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெற்ற அகழாய்வில் தங்க கம்பி, காளை உருவ பொம்மை உள்ளிட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. கீழடியில் ஏப்ரல் மாதம் 6-ம் தேதி, வீரணன் என்பவரது 35 சென்ட் நிலத்தில் 9-ம் கட்ட அகழாய்வு பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுவரை 9 குழிகள் தோண்டப்பட்டுள்ள நிலையில், 4 குழிகளில் ஒழுங்கற்ற தரைதளம் வெளிப்பட்டதால் அகழாய்வு பணிகள் நிறுத்தப்பட்டு மற்ற குழிகளில் பணிகள்  நடைபெற்றன. தற்போது இதில் காது குத்தும் கம்பி, சுடுமண்ணால் ஆன காளை உருவம், விலங்கு உருவ பொம்மை, செப்பு கம்பி, கண்ணாடி மணிகள், குறியீடுகளுடன் கூடிய பானை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.