மேற்குவங்க உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், பூத் ஏஜெண்டுகள் உள்ளிட்ட 10 பேர் கொல்லப்பட்டதோடு வாக்குச்சாவடிகளுக்கு தீவைத்தும் வன்முறை அரங்கேறியுள்ளது.
மாநிலத்தில் காலியாக உள்ள 63 ஆயிரத்து 229 உள்ளாட்சிப் பதவிகளுக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது. வேட்புமனுத்தாக்கலின் போதே பல்வேறு இடங்களில் வன்முறை வெடித்த நிலையில், கூச்பெகார் பாஜக பூத் ஏஜெண்டான மாதவ் பிஸ்வாஸ் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். தொடர்ந்து வெடித்த வன்முறையில் அப்பகுதியின் வாக்குச்சாவடிகளில் மர்மநபர்கள் புகுந்து தீ வைத்த சம்பவமும் அரங்கேறியது.
அதேபோல் வடக்கு பர்கானாசின் சுயேட்சை வேட்பாளரின் பூத் ஏஜெண்ட் அப்துல்லா கொலை செய்யப்பட்ட நிலையில், டி.எம்.சி வேட்பாளரின் கணவரே கொலைக்குக் காரணம் எனக்கூறி பொருட்களுக்கு தீவைத்து கிராமத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ரெஜிநகர், துஃபான்கஞ்ச், கர்காம் பகுதியில் டி.எம்.சி-ன் 3 தொண்டர்கள் கொலை செய்யப்பட்டதாக அக்கட்சி குற்றம் சாட்டியுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த 3 பேர் கொல்லப்பட்டதாகவும் புகார் கூறப்பட்டுள்ளது. இவ்வாறாக இன்றைய தேர்தல் வன்முறையில் மட்டும் 10 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக நள்ளிரவில் மூர்ஷிபாத் மாவட்டத்தின் ஷாம்ஷெர்கஞ்ச் பகுதியில் டி.எம்சி - காங்கிரஸ் தொண்டர்களிடையே ஏற்பட்ட மோதலில் வீடுகள் சூறையாடப்பட்டன. இந்நிலையில் பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகளில் துணை ராணுவப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து கடும் பாதுகாப்புக்கு மத்தியில் மக்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.
தொடர்ந்து வடக்கு பர்கானாஸ் வாக்குச்சாவடிகளை ஆய்வுசெய்த பின் பேட்டியளித்த ஆளுநர் சி.வி.ஆனந்தபோஸ், குண்டர்கள் வாக்களிக்கத் தடுப்பதாகக் கூறி தன் வாகனத்தை வழிமறித்து மக்கள் புகாரளிப்பதாகக் கூறினார். ஜனநாயகத்தின் புனிதமான நாளான இன்று, தோட்டாக்கள் பயன்படுத்தப்படுவது வருத்தமளிப்பதாகவும் தெரிவித்தார்.