தமிழ்நாடு

பனிமயமாதா பேராலயத்தின் 16வது தங்கத்தேர் பவனி...அலைமோதிய பக்தர்கள் கூட்டம்!

Tamil Selvi Selvakumar

தூத்துக்குடி பனிமயமாதா பேராலயத்தின் 16வது தங்கத்தேர் பவனி வெகுவிமர்சையாக நடைபெற்று வருகிறது. இதில் லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு மாதாவை தரிசித்து வருகின்றனர். 

தூத்துக்குடியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற தூய பனிமயமாதா பேராலய திருவிழா ஆண்டுதோறும் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி 441-வது ஆண்டு திருவிழா கடந்த 26ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய நிலையில், விழா நாட்களில் ஜெபமாலை, மறையுரை,  நற்கருணை ஆசீர் மற்றும் சிறப்பு திருப்பலிகள் நடைபெற்றது.

இதனை தொடர்ந்து மறைமாவட்ட நூற்றாண்டு விழாவையொட்டி, 16-வது முறையாக தங்கத்தேர் பவனி இன்று நடந்தது. தங்கதேர் பவனியை முன்னிட்டு, பல்வேறு மாவட்டம் மற்றும் மாநிலங்களிலிருந்து லட்சக்கணக்கான மக்கள் வருகை புரிந்து தேரை வடம் பிடித்து இழுத்து தரிசனம் செய்தனர்.

தூத்துக்குடி, தேனி, திண்டுக்கல், தென்காசி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் உள்ளிட்ட 6 மாவட்டங்களை சேர்ந்த 2ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அசம்பாவிதங்களை தடுக்கும் பொருட்டு 100க்கும் மேற்பட்ட சீறுடை அணியாத போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பனிமயமாதா பேராலயத்தின் தங்கத்தேர் பவனியை முன்னிட்டு இன்று உள்ளுர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது  குறிப்பிடதக்கது.