தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில், ஒட்டு மொத்தமாக 91.39 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த ஏப்ரல் 6ம் தேதி தொடங்கி 20ம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வினை எழுத 4 லட்சத்து 74 ஆயிரத்து 543 மாணவர்கள், 4 லட்சத்து 63 ஆயிரத்து 522 மாணவிகள், இரண்டு திருநங்கைகள் என மொத்தம் 9 லட்சத்து 38 ஆயிரத்து 67 பேர் தேர்வு எழுதிய நிலையில், இன்று தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இந்நிலையில் ஒட்டு மொத்தமாக தேர்ச்சி பெற்ற 91.39 சதவீத மாணவர்களில், மாணவிகள் 94.66 சதவீதமும், மாணவர்கள் 88.16 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தொடர்ந்து தேர்ச்சி விகிதத்தில், 97.67 சதவீதம் பெற்று பெரம்பலூர் முதல் இடத்தை பிடித்துள்ளது. அதேபோல் 97.53 சதவீதம் எடுத்து 2-வது இடத்தில் சிவகங்கை மாவட்டமும், 96.22 சதவீதம் தேர்ச்சியுடன் 3-வது இடத்தில் விருதுநகர் மாவட்டமும் உள்ளது. அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம், 87.45 சதவீதமும், அரசு உதவிப்பெறும் பள்ளிகள் 92.2 சதவீதம், மற்றும் தனியார் பள்ளிகளில் 97.38 சதவீதம் மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இதையும் படிக்க : கர்நாடகா செல்லும் முதலமைச்சர்...திமுக உயர்நிலை செயல்திட்ட குழு கூட்டத்தின் தேதி மாற்றம்...!
வழக்கம் போல மாணவர்களை விட மாணவிகள் 6.50 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாற்றுத்திறனாளி மாணவர்கள் 89.77 சதவீதமும், சிறைவாசி மாணவர்கள் 42.42 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். சென்னையில் ஒட்டுமொத்தமாக 40 ஆயிரத்து 708 பேர் தேர்ச்சி பெற்றுள்ள நிலையில், அதில் 18 ஆயிரத்து 756 மாணவர்களும், 21 ஆயிரத்து 952 மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
மொழிபாடத்தில் 95.55 சதவீதமும், ஆங்கிலத்தில் 98.93 சதவீதமும், கணிதத்தில் 95.54 சதவிகிதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதேபோல், அறிவியல் பாடத்தில், 95.75 சதவீதமும், சமூக அறிவியலில் 95.83 சதவீதம் மாணவ, மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.