உலக பாரம்பரிய வாரத்தை முன்னிட்டு, மாமல்லபுரம் உள்ளிட்ட பாரம்பரிய சின்னங்களை சுற்றிப்பார்க்க, இன்று சுற்றுலா பயணிகளுக்கு இலவச அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
உலக பாரம்பரிய வாரம்:
சர்வதேச நாடுகளில் உள்ள சரித்திர கால பாரம்பரிய கலைச் சின்னங்கள் அந்தந்த பகுதிகளின் பழைமையையும், கலாச்சாரத்தையும், வாழ்க்கை முறையையும் உணர்த்துகின்றன. அத்தகைய நினைவுச் சின்னங்களை வருங்கால தலைமுறையினர் அறிந்துகொள்ளவும், அவற்றின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் ஆண்டுதோறும் நாடு முழுவதும் மத்திய தொல்லியல் துறை சார்பில், நவம்பர் 19 ஆம் தேதி முதல் நவம்பர் 25 ஆம் தேதி வரை உலக பாரம்பரிய வாரம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
இதையும் படிக்க: மக்களே உஷார்...அடுத்த 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு!
இலவச அனுமதி:
அதன்படி, நவம்பர் 19 ஆம் தேதியான இன்று உலக பாரம்பரிய வாரம் தொடங்கியுள்ளது. பாரம்பரிய வாரத்தை முன்னிட்டு, மத்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள மாமல்லபுரம், செஞ்சிகோட்டை, சாளுவன்குப்பம் புலிக்குகை, சித்தன்னவாசல், மதுரை திருமலை நாயக்கர் மஹால் உள்ளிட்ட நாடு முழுவதிலும் உள்ள பாரம்பரிய சின்னங்களை பார்க்க இன்று (நவம்பர் 19) ஒரு நாள் இலவச அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தமிழக தொல்லியல் துறையும் இலவச அறிவிப்பு:
அதேபோல், தமிழக தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து நினைவுச் சின்னங்கள், கோட்டைகள், அரண்மனைகள் உள்ளிட்டவற்றை அனைவரும் இன்று இலவசமாக பார்வையிடலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட தொல்லியல் அறிஞர்கள்:
அதேபோன்று, மாவட்ட தொல்லியல் அறிஞர்கள், அந்தந்த மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லுாரிகளுக்கு சென்று, மாவட்டத்தின் வரலாற்று சின்னங்களின் சிறப்புகள் குறித்து உரையாற்ற உள்ளனர். இன்று தொடங்கப்பட்டுள்ள உலக பாரம்பரிய வாரம் நவம்பர் 25 ஆம் தேதியுடன் முடிவடையும் என்பது குறிப்பிடத்தக்கது.