இந்தியா

பீகாரில் நிதிஷை வீழ்த்த பாஜகவின் திட்டம் என்ன??

Malaimurasu Seithigal TV

மகாராஷ்டிராவில் பாஜகவின் இரண்டாவது பெரிய தலைவர் வினோத் தாவ்டே.  அவர் பீகாரில் பாஜகவின் பொறுப்பாளராக தற்போது நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்னதாக 2020 ஆம் ஆண்டு, மகாராஷ்டிராவில் துணை முதலமைச்சராக இருக்கும்  தேவேந்திர ஃபட்னாவிஸ் பீகார் சட்டமன்றத் தேர்தலின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருந்தார்.

அப்போது நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ஃபட்னாவிஸின் செயல்பாடுகளால் தேசிய ஜனநாயகக் கூட்டணியிலான ஆட்சி அங்கு அமைக்கப்பட்டதுடன் நிதிஷ் குமாரின் கட்சியான ஐக்கிய ஜனதா தளம் பெற்ற இடங்களை விட அதிகமான இடங்களை பாஜக பெற்றது. அதன் பிறகு பாஜக ஆதரவுடன் முதல்வராக பதவியேற்ற நிதிஷ் குமார், தற்போது லாலு பிரசாத்தின் ராஷ்டிரிய ஜனதா தளத்துடன்  இணைந்து ஆட்சியை பிடித்துள்ள நிலையில், பாஜக பீகாரில் ஆட்சியை பறிகொடுத்துள்ளது.

எனவே, பீகார் போன்ற பெரிய மாநிலத்தில், 2024 லோக்சபா தேர்தலில் தாவ்டே மத்திய தலைமையின் அழுத்தத்தை அதிக அளவில் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் எனக் கூறப்ப்டுகிறது.

வினோத் தாவ்டே:

மும்பை பாஜகவின் இளம் வயது தலைவரான, வினோத் தாவ்டே ஒரு திறமையான அமைப்பாளராகக் கருதப்படுகிறார். சட்டப் பேரவையின் எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்துள்ளார். சில காலம் அரசியல் காரணங்களால் அவர் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் விலகி இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.  

ஆனால் அதன் பிறகு அவர் வலுவான நிலையில் அரசியலில் மறுபிரவேசம் செய்தார். இப்போது அவரை பீகார் போன்ற மாநிலத்தின் பொறுப்பாளராக்கியதன் மூலம் கட்சி அவர்மேல் வைத்துள்ளா நம்பிக்கையை உணர முடிகிறது. 

சிறப்பாக செயல்படுவாரா தாவ்டே:

தாவ்டே கிழக்கு உத்தரபிரதேசம் மற்றும் பீகார் அரசியலை நன்கு அறிந்தவர்.வினோத் தாவ்டே 90களில் அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்தின் பொதுச் செயலாளராக இருந்தபோது கிழக்கு உத்திரபிரதேசத்தில் சில வருடங்கள் பணியாற்றியுள்ளார். எனவே, உத்தரபிரதேசம் மற்றும் பீகார் அரசியல் சூழ்நிலைகளை நன்கு அறிந்தவர் தாவ்டே.

பீகார் மாநில பொறுப்பை பெறுவதற்கு முன்பு, தாவ்டே ஹரியானா மாநிலத்தில் பாஜகவின் பொறுப்பாளராக இருந்துள்ளார். மூன்று விவசாய சட்டங்களுக்கு எதிராக கடந்த ஆண்டு தொடங்கிய விவசாயிகள் போராட்டத்தின் போது ஹரியானா விவசாயிகளிடையே நம்பிக்கையை மீட்டெடுப்பதில் அவர் முக்கிய பங்கு வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதே சமயம் சண்டிகர் மாநகராட்சி தேர்தலில் குறைவான இடங்களையே பெற்றிருந்தாலும், பாஜகவின் மேயராகி தலைமைத்துவ திறமையை வெளிப்படுத்தியுள்ளார் தாவ்டே.

பீகாரில் தாவ்டே வெற்றி பெறுவார் என மகாராஷ்டிர பாஜக தலைவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.