இந்தியா

பெண்களுக்கு பாதுகாப்பற்ற மாநிலம் உத்திரபிரதேசம்!!!

Malaimurasu Seithigal TV

உத்திரபிரதேசத்தின் லக்கிம்பூர் கேரியில் பட்டியல் இன சிறுமிகள் இருவர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் பாஜகவை தாக்கி பேசியுள்ளார் ராகுல் காந்தி.

லக்கிம்பூர்கேரி:

உத்திர பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரியில் வசித்து வந்த சகோதரிகள் அவர்கள் வீட்டிற்கு அருகில் உள்ள கரும்பு தோட்டத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளனர்.

ராகுல் காந்தி:

”லக்கிம்பூர்கேரியில் பட்டப்பகலில் இரண்டு பட்டியல் இன சிறுமிகள் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் மிகவும் கவலையளிக்கிறது” என ட்விட்டர் பக்கத்தில் ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார்.

பில்கிஸ் பானோ:

பில்கிஸ் பானோ கூட்டுப் பலாத்கார வழக்கில் தண்டனை பெற்ற 11 குற்றவாளிகள் சிறையிலிருந்து நிவாரணக் கொள்கையின் கீழ் விடுவிக்கப்பட்டதை குறிப்பிடும் வகையில் “ பாலியல் குற்றவாளிகளை விடுதலை செய்பவர்களிடமிர்ந்தும் அத்தகையவர்களை வரவேற்பவர்களிடமிருந்தும் பெண்களின் பாதுகாப்பை எதிர்பார்க்க முடியாது” எனவும் ராகுல் கூறியுள்ளார்.

பிரியங்கா காந்தி:

”லக்கிம்பூர் கேரியில் சகோதரிகள் இருவர் கொல்லப்பட்ட சம்பவம் மனதை உலுக்கும் வகையில் உள்ளது.  சிறுமிகள் பட்டப்பகலில் கடத்தப்பட்டதாகவும் உறவினர்கள் கூறியுள்ளனர்” என பிரியங்கா காந்தி கூறியுள்ளார்.

மேலும் “ தினமும் நாளிதழ்கள் தொலைக்காட்சிகளில் பொய்யான விளம்பரங்கள் கொடுப்பதால் சட்டம் ஒழுங்கு சீர்படாது. உத்திரபிரதேசத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் எதனால் அதிகரித்து வருகின்றன?”  என பதிவிட்டுள்ளார் பிரியங்கா.

தலைமை காவலர்:

லக்கிம்பூர் கேரியின் தலைமை காவலர் செய்தியாளர்களிடம் பேசுகையில் “ குற்றவாளிகள் மூவரை இரவோடு இரவாக கைது செய்துள்ளோம்.” என தெரிவித்துள்ளார்.

விசாரணை:

முதற்கட்ட விசாரணையில் குற்றவாளிகளின் வற்புறுத்தலினால் சிறுமிகள் இருவரும் தோட்டத்திற்கு சென்றுள்ளனர் எனவும்  அவர்கள் சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்து கழுத்தை நெரித்து கொன்றதாக குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளனர் என தலைமை காவலர் தெரிவித்துள்ளார்.