இந்தியா

வைரஸ் காய்ச்சல் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை...கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் அறிவிப்பு!

Tamil Selvi Selvakumar

புதுச்சேரியில் ஒன்று முதல் 8ஆம் வகுப்பு வரை உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு புதுச்சேரி அரசு விடுமுறை அறிவித்துள்ளது. 

இந்தியாவில் புதிய வகை வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. இன்புளுயன்சா ஏ வைரஸின் துணை வைரசான இந்த வைரஸ் எச்3என்2 என அழைக்கப்படுகிறது. இந்த புதிய வகை வைரஸ் 15 வயதுக்கு உள்பட்ட குழந்தைகள் மற்றும் முதியவர்களை அதிகம் தாக்கும் என்று கூறப்படுகிறது.

இந்த வைரஸ் காய்ச்சலால் குழந்தைகள் அதிகளவில் பாதிக்கப்படுவதால், பள்ளிகளுக்கு விடுமுறை விடவேண்டும் என்று புதுச்சேரி சட்டப்பேரவையில் சட்டமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்நிலையில் வைரஸ் காய்ச்சல் அதிகம் பரவி வருவதால், புதுச்சேரி மாநிலத்தில் ஆரம்ப வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு நாளை (16.03.2023) முதல் 26.03.2023 வரை விடுமுறை அளிக்கப்படுவதாக சட்டப்பேரவையில் கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார்.