இந்தியா

நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது இன்று உரையாற்ற உள்ளார் பிரதமர் மோடி...!

Tamil Selvi Selvakumar

குடியரசுத்தலைவர் உரை மீதான நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் பிரதமர் மோடி இன்று மாநிலங்களவையில் உரையாற்றுகிறார்.

கடந்த ஜனவரி 31ம் தேதி, மத்திய நிதிநிலை அறிக்கை சமர்பிக்கப்பட்ட போது, குடியரசுத்தலைவர் உரையுடன் இரு அவைகளும் தொடங்கப்பட்டது. இந்நிலையில் அதானி விவகார சர்ச்சைகளுக்கு மத்தியில் குடியரசுத்தலைவர் உரை மீதான நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு இன்று பிரதமர் மோடி பதிலளிக்கிறார். ஹிண்டர்ன்பெர்க் ஆய்வறிக்கை தொடர்பாக விவாதிக்க அனுமதிக்கக் கோரி, எதிர்கட்சிகள் நாள்தோறும் இரு அவைகளிலும் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. 

தொடர்ந்து எதிர்கட்சிகளின் கடும் வாக்குவாதத்திற்கு மத்தியில், நேற்று தனது உரையைத் தொடங்கிய பிரதமர் மோடி, காங்கிரசின் வெறுப்புணர்வு அரசியல் அவையில் அம்பலமாகியுள்ளதாக குறிப்பிட்டார். இந்தியாவின் டிஜிட்டல் வளர்ச்சி, செல்போன் உற்பத்தி, எரிசக்தித்துறை என அனைத்திலும் இந்தியா வரலாறு படைத்து வருவதாகக் கூறினார். அவரது உரை முடியும்  வரை எதிர்கட்சிகள் அதானி அதானி என கூச்சலிட்ட நிலையில், பிரதமர் மோடி அதுதொடர்பாக எந்தவொரு விளக்கத்தையும் தனது உரையில் அளிக்காதது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில் பிரதமர் மோடியின் உரையை புறக்கணித்து எதிர்கட்சிகள் வெளிநடப்பு செய்தன.

இந்நிலையில் குடியரசுத்தலைவர் உரை மீதான நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் பிரதமர் மோடி இன்று மாநிலங்களவையில் உரையாற்ற உள்ளார்.