இன்று 7 மணிக்குள் சமர்பிக்க உத்தரவு...ஆனால் ஓபிஎஸ் கேட்ட கேள்வி...அப்போ அதிமுக வேட்பாளர் யார்?

இன்று 7 மணிக்குள் சமர்பிக்க உத்தரவு...ஆனால் ஓபிஎஸ் கேட்ட கேள்வி...அப்போ அதிமுக வேட்பாளர் யார்?

எடப்பாடி பழனிசாமி முன்மொழிந்துள்ள வேட்பாளரை ஏற்கிறீர்களா அல்லது மறுக்கிறீர்களா என்ற விவரத்தை சொல்லுமாறு அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களுக்கும் அவைத்தலைவர் உத்தரவிட்டுள்ளார்.

அதிமுக பொதுக்குழு வழக்கு :

அதிமுக கடந்த ஜூலை 11 ஆம் தேதி நடந்த பொதுக்குழு கூட்டத்திற்கு பிறகு ஈபிஎஸ், ஓபிஎஸ் என இரண்டு அணிகளாக பிரிந்தது. மேலும் இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. 

தேர்தல் ஆணையம் மறுப்பு :

இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வரும் பிப்ரவரி 27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்துவதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்த அறிவிப்புக்கு பிறகு தமிழ்நாட்டில் அரசியல் களம் சூடுபிடித்தது. அனைத்துக் கட்சிகளும் தங்களது நிலைப்பாட்டை அறிவித்து வந்த நிலையில், அதிமுக தரப்பில் இரண்டு வேட்பாளர்களை அறிவித்தனர். இதனால் அதிமுக சின்னம் எந்த அணிக்கு என்ற குழப்பம் நிலவிய நிலையில், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி கையொப்பமிட்ட வேட்பாளர் மனுவை தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டது.

பொதுக்குழுவை கூட்டி வேட்பாளரை தேர்வு செய்ய வேண்டும் :

இதன்காரணமாக, ஈபிஎஸ் தரப்பு அதிமுக பொதுக்குழு வழக்கில் இடைக்கால உத்தரவு வழங்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தரப்பு ஆதரவாளர்கள் அனைவரையும் உள்ளடக்கிய பொதுக்குழுவை கூட்டி வேட்பாளரை தேர்வு செய்ய வேண்டும் என்று இடைக்கால உத்தரவு பிறப்பித்தது.

இதையும் படிக்க : இல்லந்தோறும் ஒலித்த குரல்...இன்று சென்னை பெசன்ட் நகரில்...!

தமிழ்மகன் உசேன் அனுப்பிய கடிதம் :

இந்த உத்தரவிற்கு பிறகு, பொதுக்குழு பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், ஜே சி டி பிரபாகர், மனோஜ் பாண்டியன் உள்பட அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களுக்கும் நேற்று கடிதம் அனுப்பினார். அந்த கடிதத்தில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்காக எடப்பாடி பழனிசாமி முன்மொழிந்த வேட்பாளர் தென்னரசுவை ஏற்கிறீர்களா? அல்லது மறுக்கிறீர்களா? என்ற விவரத்தை இன்று மாலை 7 மணிக்குள்ளாக சொல்ல வேண்டும் என்று அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களுக்கும் அவைத்தலைவர் உத்தரவிட்டிருந்தார்.

அதிமுக பொதுக்குழு தேர்ந்தெடுக்கப்போகும் வேட்பாளர் யார் ?

இந்நிலையில், அவைத்தலைவர் அனுப்பிய கடிதம் ஓபிஎஸ்க்கும் சென்ற நிலையில், அதிமுக வேட்பாளராக தென்னரசுவை முன்மொழிந்துள்ள எடப்பாடி பழனிசாமியின் பதவி பற்றி எதுவும் கடிதத்தில் இல்லாததால் அவர் என்ன பொறுப்பில் இருக்கிறார் என ஓ.பன்னீர்செல்வம் தரப்பு கேள்வி எழுப்பியுள்ளனர்.  இதனால் அவைத்தலைவர் அனுப்பியுள்ள கடிதத்திற்கு ஓபிஎஸ் தரப்பு ஓகே சொல்லுமா? அதிமுக பொதுக்குழு தேர்ந்தெடுக்கப்போகும் வேட்பாளர் யார் ? என்ற குழப்பம் அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.