இந்தியா

கேரள மாநிலத்தில் வந்தே பாரத் சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி...!

Tamil Selvi Selvakumar

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். 

பல்வேறு திட்டங்களை துவக்கி வைப்பதற்காக 2 நாள் பயணமாக கேரளா வந்த பிரதமர் மோடிக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதன்படி, நேற்று கொச்சியில் பல்வேறு திட்டங்களை துவக்கி வைத்த பிரதமர், 2 வது நாளாக இன்று திருவனந்தபுரம் வந்தடைந்தார்.

அதனை தொடர்ந்து திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு வந்த பிரதமரை ஆளுநர் ஆரிப் முகமது கான், முதலமைச்சர் பினராயி விஜயன் ஆகியோர் வரவேற்றனர். அதன்பின்பு, அவர் திருவனந்தபுரம் சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு சென்றார். அப்போது திருவனந்தபுரம் - காசர்கோடு வரையிலான வந்தே பாரத் ரயில் சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தார். முன்னதாக ரயிலில் பயணித்த மாணவர்களுடன் பிரதமர்  கலந்துரையாடியது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து டிஜிட்டல் அறிவியல் பூங்காவிற்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடிக்கு, பாதுகாப்பு அச்சுறுத்தல் விடப்பட்டதால் கூடுதலாக பல்லாயிரக் கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.