இந்தியா

துருக்கிக்கு உதவிக்கரம் நீட்டிய இந்தியா...! 

Tamil Selvi Selvakumar

சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் உருக்குலைந்து காணப்படும் துருக்கிக்கு உதவும் வகையில் இந்தியாவிலிருந்து தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் புறப்பட்டு சென்றுள்ளனர்.

துருக்கி மற்றும் சிரியாவில் நேற்றைய தினம் அதிகாலை முதலே அடுத்தடுத்து பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டு வந்தது. இதனால் அங்கு கட்டிடங்கள் ஒவ்வொன்றாக இடிந்து விழுந்தது. இதில் இடிப்பாடுகளில் சிக்கி 15000 க்கும் மேற்பட்ட மக்கள் காயமடைந்த நிலையில், 3800 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 

தொடர்ந்து, கட்டிட இடர்பாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நிலநடுக்கத்தால் உருக்குலைந்துள்ள துருக்கிக்கு உதவிக்கரம் நீட்டுவதற்காக இந்தியா முன்வந்துள்ளது.

பொதுவாக ஒரு நாடு பிரச்னையில் இருக்கும் போது மற்ற நாடுகள் முன்வந்து அந்த நாடுகளுக்கு உதவிக்கரம் நீட்டுவது நடைமுறையில் இருந்து வரும் ஒன்று. அந்தவகையில், தற்போது பயங்கர நிலநடுக்கத்தால் உருக்குலைந்துள்ள துருக்கிக்கு இதுவரை 45 உலக நாடுகள் உதவிக்கரம் நீட்டியுள்ள நிலையில், அந்த வரிசையில் இந்தியாவும் இணைந்துள்ளது.

அதன்படி, இந்தியா சார்பில் நிவாரணப் பொருட்களுடன், தேசிய பேரிடர் குழுவை சேர்ந்த 101 வீரர்கள் துருக்கி புறப்பட்டுச் சென்றுள்ளனர். மேலும் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்காக உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள ஹிண்டன் ஏர்பேஸிலிருந்து சிறப்புப் பயிற்சி பெற்ற நாய்ப் படை மற்றும் தேவையான உபகரணங்களுடன் தேசிய பேரிடர் மீட்பு பணியாளர் குழுவினரும் புறப்பட்டு சென்றுள்ளனர்.