இந்தியா

2 கி.மீ வேகத்தில் நகர்ந்து தீவிர புயலாக வலுவடைந்தது ”பிபோர்ஜாய்” புயல்...!

Tamil Selvi Selvakumar

அரபிக் கடலில் உருவான பிபோர்ஜாய் புயல் வடக்கு நோக்கி நகர்ந்து தீவிரப் புயலாக வலுவடைந்திருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  

தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடலில் உருவான பிபோர்ஜாய் புயல் தீவிரப் புயலாக வலுவடையும் என்று வானிலை மையம் தெரிவித்திருந்தது. அதன்படி, பிபோர்ஜாய் புயல் வடக்கு நோக்கி நகர்ந்து தீவிரப் புயலாக வலுவடைந்திருப்பதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

அந்தவகையில், கோவாவிலிருந்து 890 கிலோமீட்டரிலும், மும்பைக்கு ஆயிரம் கிலோ மீட்டரிலும், போர்பந்தருக்கு 1070 கிலோ மீட்டரிலும்,  கராச்சிக்கு 1370 கிலோ மீட்டரிலும் பிபோர்ஜாய் புயல் மையம் கொண்டுள்ளது.

மேலும் இது வடக்கு நோக்கி நகர்ந்து, அதி தீவிர புயலாக அடுத்த 24 மணி நேரத்தில் மாறக்கூடும் எனவும், கடந்த 6 மணி நேரத்தில் 2 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.